தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றிச்சென்ற ஏசி பேருந்தில் திடீர் தீ விபத்து: ஒரகடம் அருகே பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற ஏசி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜி (30). இவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் இயங்கும் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, செங்கல்பட்டு – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, மாத்தூர் பகுதியை கடக்கும்போது பேருந்தின் முன் பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது.

உடனே, சூதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதுடன், ஊழியர்களை அவசர அவசரமாக வெளியேற்றியுள்ளார். இதையடுத்து, சில நொடிகளில் பேருந்து தீ பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. பின்னர், இதுகுறித்து ஒரகடம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், எரிந்துக்கொண்டிருந்த ஏசி பேருந்தில் தண்ணீரை பீய்ச்சியடித்து, அரை மணி நேரம் போராடி பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருப்பினும், பேருந்து முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை