செங்குன்றம் அருகே டிராக்டர் மோதி தனியார் ஊழியர் பலி: காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

புழல்:செங்குன்றம் அருகே, டிராக்டர் மோதி தனியார் ஊழியர் பரிதாபமாக பலியானார். செங்குன்றம் அடுத்த அலமாதி சோலையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விக்ரம்(21). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் அலமாதியிலிருந்து செங்குன்றம் நோக்கிச் சென்றார். அப்போது செங்குன்றம் அடுத்த கலைஞர் கருணாநிதி நகர் புற காவல் நிலையம் அருகில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் மீது மோதியது, இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை பார்த்த டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், இறந்தவரின் உறவினர்கள் மாதவரம் பால் பண்ணையில் உள்ள செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையத்திற்கு சென்று விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்தால்தான் நாங்கள் உடலை பெற்றுக் கொள்வோம் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.

Related posts

கோவை வனப்பகுதியில் இருந்து பாக்கு தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறை!

கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு