தனியார் பள்ளியில் திடீர் தீ விபத்து: திருப்போரூர் அருகே பரபரப்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே தண்டலத்தில் புதிய தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு புதிய பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் பொதுமக்களிடமிருந்து குழந்தைகளுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு சேர்க்கை நடந்தது. இதில், மொத்தம் 160 மாணவர்கள் பள்ளியில் புதியதாக சேர்ந்துள்ளனர். இதையடுத்து, நேற்று பள்ளியில் சேர்ந்த புதிய மாணவ, மாணவியர் வரவழைக்கப்பட்டு புத்தகம், சீருடைகள் வழங்கப்பட்டது. பின்னர், திறப்பு விழா கொண்டாட்டம் நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் மதியம் 1 மணிக்கு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று முதல் பள்ளி வழக்கம்போல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர் ஆகியோர் இன்று பள்ளி துவங்குவதை யொட்டி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் பள்ளியின் தரை தளத்தில் ஒரு அறையில் ஏ.சி. இயந்திரம் வெடித்து திடீரென தீ பிடித்து புகை பரவியது. இதையடுத்து மின்சாரம் அணைக்கப்பட்டு திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அந்த அறையில் இருந்த பர்னிச்சர்கள், ஏ.சி. மெசின் மற்றும் அட்டைப்பெட்டிகள் போன்றவை மட்டும் தீயில் சேதமடைந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு