தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் விற்பனையாகும் அளவிற்கு மட்டுமே 5, 2 கிலோ சிலிண்டர் தர வேண்டும்: இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு கோரிக்கை

சென்னை: தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் விற்பனையாகும் அளவிற்கு மட்டுமே 5 கிலோ, 2 கிலோ சிலிண்டர் தர வேண்டும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு எரிவாயு அமைப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் எரிவாயு அமைப்பாளர் கூறியதாவது: ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஒரு அங்கமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து சென்னை மண்டல எரிவாயு நிறுவனம் இயங்கி வருகிறது.

இதன் மண்டல மேலாளராக பொறுப்பு வகிப்பவர், சென்னையில் இண்டேன் காஸ், கிளைகளாக சுமார் 113க்கும் மேற்பட்ட கிளைகளை தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடத்தி வருவதனை கண்காணித்து வருகிறார்.
கடந்த இரண்டு மாதங்களாக அதிகம் விற்பனை ஆகாத 5 கிலோ, 2 கிலோ எடையில் டெபாசிட் கட்டி வாங்கும் வகையிலும், காலி சிலிண்டர் கொடுத்து முழு சிலிண்டர்கள் வழங்கும் வகையிலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விற்பனை அளவை விட 10 மடங்கு அதிகம் வழங்கி வருகிறார்கள். இதனால் அந்த சிலிண்டர்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்து, தொகை முடங்கிப்போய், விற்பனை நிறுவனங்கள் நலிந்து வருகின்றன.

இதுதவிர, வெல்டிங் செய்ய உபயோகப்படுத்திடும் ‘நானோ’ என்கிற எரிவாயு சிலிண்டர்கள் வழங்கிட தனியே ஏஜென்சிகள் இருந்தும், அதனையும் 50 எண்ணிக்கைக்கு அதிகமாக அனுப்பி, அதுவும் முடங்கிப்போய் உள்ளது. தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் கிளைகள் ஒவ்வொன்றிலும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான தொகை முடங்கிப்போய் உள்ளது. தினசரி 10 முதல் 15 சிலிண்டர்களே விற்பனையாகும் நிலையில் 300க்கும் மேற்பட்ட 5, 2 கிலோ சிலிண்டர்கள் முடங்கி உள்ளது. இதனால் வீட்டு உபயோகம் மற்றும் வணிக சிலிண்டர்கள் வழங்குதலில் கவனம் சிதறி போகிறது. எனவே விற்பனையாகும் அளவிற்கு மட்டுமே 5 கிலோ, 2 கிலோ சிலிண்டர் தர வேண்டும். நானோ சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை