ரூ.2 லட்சம் கடனுக்காக சென்னையில் இருந்து தனியார் நிறுவன ஊழியரை கடத்தி லாட்ஜில் 3 நாள் அடைத்து மிரட்டல்: திருவண்ணாமலையில் 4 பேர் கைது, அதிமுக பிரமுகருக்கு போலீஸ் வலை

சென்னை: ரூ.2 லட்சம் கடனுக்காக சென்னையில் இருந்து தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி திருவண்ணாமலை லாட்ஜில் 3 நாட்கள் அடைத்து வைத்து மிரட்டிய 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான அதிமுக பிரமுகரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் குணசீலன்(48), சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும், எல்ஐசி ஏஜென்டாகவும் உள்ளார்.

இவரது மனைவி மஞ்சுளா தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் கணினி உதவியாளராக பணிபுரிகிறார். இவர்களுக்கு, ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், குணசீலன் கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் பயிற்சி படிக்கும்போது, உடன் படித்தவர் திருவண்ணாமலை அடுத்த வேடியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(43). அந்த நட்பின் அடிப்படையில் கோபாலகிருஷ்ணனிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சத்தை குணசீலன் கடனாக பெற்றுள்ளார். அதை திருப்பி தராமல் தொடர்ந்து அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, திருவண்ணாமலை (வடக்கு) அதிமுக ஒன்றிய செயலாளர் ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(45) என்பவருடன், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 5 பேர் சென்னை வந்து குணசீலனை காரில் திருவண்ணாமலைக்கு கடத்தி வந்து ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து ரூ.2 லட்சத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்தால் மட்டுமே விடுவிக்க முடியும் என மிரட்டி உள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய செல்போனில் இருந்து இந்த தகவலை ரகசியமாக மனைவிக்கு வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் குணசீலன் அனுப்பியுள்ளார். அவரது மனைவி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின்படி தனிப்படையினர் திருவண்ணாமலையில் உள்ள லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த குணசீலனை நேற்று அதிரடியாக மீட்டனர்.

போலீசாரை கண்டதும் லாட்ஜ்க்கு வெளியே காரில் இருந்த அதிமுக ஒன்றிய செயலாளர் சரவணன் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. கோபாலகிருஷ்ணன், நேரு(59), சபரி(31), ஜெயபால் (54) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடி தலைமறைவாக உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் சரவணனை தேடி வருகின்றனர்.

Related posts

ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!

காட்டுக் கோழி (Junglefowl)