வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் பால் விலையை அதிரடியாக ரூ.2 குறைத்த தனியார் நிறுவனம்

சென்னை: தமிழகத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் விற்பனை குறைவு காரணமாக பால் விலையை ரூ.2 குறைத்து தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி பால் உற்பத்தி சுமார் 2.25 கோடி லிட்டராகும். தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் 16 சவீதத்திற்கும் குறைவாகவே கொள்முதல் செய்து, பால், பால் சார்ந்த உபபொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. மீதமுள்ள 84 சதவீதம் பாலினை தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு கூட்டுறவு பால் நிறுவனங்கள் பாலினை கொள்முதல் செய்து வருகிறது.

இந்நிலையில் நடப்பாண்டில் பள்ளி, கல்லூரி இறுதியாண்டு தேர்வுக்கு பிறகான விடுமுறை மற்றும் கோடை கால விடுமுறையால் பெரும்பாலான மக்களின் வெளியூர் சுற்றுப்பயணம் போன்ற காரணிகளால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த தினசரி பால் மற்றும் தயிர் விற்பனையில் சுமார் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த மே மாதம் பெய்த தொடர் கோடை மழை காரணமாக தற்போது தமிழ்நாட்டில் பால் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி கடந்த மே மாதம் லிட்டருக்கு ரூ.10 வரை குறைத்தது. ஆனால் பொதுமக்களுக்கு வழங்கக் கூடிய வகையில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை குறைக்கப்படவில்லை. இந்நிலையில் பிரபல தனியார் பால் நிறுவனம் நேற்று முதல் நிறைகொழுப்பு பாலுக்கான விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு ரூ.2, தயிருக்கான விற்பனை விலையை கிலோவுக்கு ரூ.4 குறைத்துள்ளது.

அதன்படி புல்கிரீம் பால் லிட்டர் ரூ.68 லிருந்து ரூ.66ஆகவும், அரை லிட்டர் பால் ரூ.37லிருந்து ரூ.36 ஆகவும் குறைந்துள்ளது. அதேபோல் தயிர் லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் தயிர் ரூ.71லிருந்து ரூ.67 ஆகவும், 500 மில்லி தயிர் ரூ.32லிருந்து ரூ.30ஆகவும் குறைந்துள்ளது. இந்த விற்பனை விலை குறைப்பு பால் கொள்முதல் விலை குறைப்போடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். நான்கு வகையான பாலுக்கு விலை உயர்வு செய்து விட்டு தற்போது நிறைகொழுப்பு பாலுக்கான விற்பனை விலையை மட்டும் குறைத்துள்ளது.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு