பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்


சேலம்: தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், பலமணி நேரம் காத்துக்கிடப்பதை தவிர்க்கும் வகையில் சிறைகளில் அப்பாயின்ட்மென்ட் வாங்கி பார்க்கும் வசதி அனைத்து சிறைகளிலும் விரைவில் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை புழல், கோவை, மதுரை, சேலம், கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர் உள்பட 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உறவினர்கள் வாரத்தில் 5 நாட்கள் பார்க்கலாம். 3 நாட்கள் விசாரணை கைதிகளையும், மற்ற 2 நாட்கள் தண்டனை, குண்டர் தடுப்பு சட்ட கைதிகளையும் பார்க்கலாம்.ஒரு கைதியை பார்க்க 3 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பார்க்க வரும் உறவினர்கள் ஆதார் கார்டு, அல்லது ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை கொண்டுவர வேண்டும்.

அதை வைத்து பார்க்க வருவோரின் புகைப்படங்களும் உடனடியாக எடுக்கப்பட்ட பிறகே கைதிகளை பார்க்க அனுமதி வழங்கப்படும். சென்னை புழல் சிறைக்கு கைதிகளை பார்க்க தினமும் 600 பேர் வருகின்றனர். கோவை சிறையில் 300 பேரும், சேலம் சிறைக்கு 150 பேரும் வருகிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கிறார்கள். குழந்தைகளை அழைத்தும் வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், சென்னை புழல் 2 சிறையில் புதிய நடைமுறையான புக்கிங் வசதி அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக தொலைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளனர். அந்த எண்ணுக்கு கைதியை எப்போது பார்க்க வருகிறோம், அவர் எந்த ஊரைச்சேர்ந்தவர். எந்த வழக்கில் கைதாகியுள்ளார் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். அதனை சிறை வார்டன்கள் பதிவு செய்து ெகாள்வார்கள். உடனடியாக எத்தனை மணிக்கு வரவேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்படும்.

சந்திப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக சிறைக்கு வரவேண்டும். வந்த பிறகு அவர்களின் புகைப்படம் எடுக்கும் பணிகள் நடக்கும். இதன் மூலம் பலமணி நேரம் காத்துக்கிடப்பது தவிர்க்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வரும்போது, எந்தவித கூட்ட நெரிசலும் இல்லாமல் பார்த்து செல்கிறார்கள். இந்த முறை கைதிகளின் உறவினர்களுக்கு எளியதாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முறையை அனைத்து மத்திய சிறைகளிலும் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு மத்திய சிறையில் இருந்தும் 3 வார்ன்கள் சென்னை புழல் 2 சிறைக்கு சென்றுள்ளனர். செயல்படுத்தப்படும் வழிமுறைகளை தெரிந்த பிறகு அனைத்து மத்திய சிறையிலும் இந்த புக்கிங் முறை அமலுக்கு வரும்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு மத்திய சிறையிலும் இருக்கும் கைதிகளை பார்க்க உறவினர்கள் குழந்தைகளுடன் நீண்டநேரம் காத்துக்கிடக்கிறார்கள். சில இடங்களில் கூட்டநெரிசலும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு போன்மூலம் புக்கிக் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனுள்ளதாக இருப்பதால் அனைத்து சிறைகளிலும் விரைவில் புக்கிங் வசதி கொண்டுவரப்படும்,’’என்றனர்.

Related posts

பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகிகள் 6 பேர் கைது

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது மேலும் இரு வழக்கு