பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி கிடைத்ததும் கணவனை கை விட்டு காதலர்களுடன் கம்பி நீட்டிய 11 பெண்கள்: உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முதல் தவணை பணம் பெற்ற 11 பெண்கள் கள்ள காதலர்களுடன் ஓட்டம் பிடித்த அவலம் அரங்கேறி உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய நலிவுற்ற மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் விதமாக நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் பயனர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மொத்த பணமும் ஒரே நேரத்தில் வரவு வைக்கப்படாமல் வீடு கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டம் நிறைவடையும்போதும் தவணை முறையில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இது குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முதல் தவணை பணம் பெற்ற 11 பெண்கள் காதலர்களுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் அண்மையில் உத்தரபிரதேசத்தின் மகாரஜ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 2,350 பயனர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளை கட்டி முடிக்கும் நிலையில் உள்ளனர்.

மகாராஜ்கஞ்ச் மாவட்டம் துதிபாரி, ஷீத்லாபூர், ராம்நகர், சாடியா, பகுல் திகா, காஸ்ரா, கிஷன்பூர் மற்றும் மவுதலி ஆகிய கிராமங்களை சேர்ந்த 11 பெண்களின் வங்கி கணக்கில் முதல் தவணையாக ரூ.40,000 பணம் வரவு வைக்கப்பட்டது. அந்த பணத்தை எடுத்து கொண்ட 11 பேரும் கணவரை கைவிட்டு விட்டு காதலர்களுடன் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளனர். “பணம் பெற்று கொண்டு இன்னும் வீடு ஏன் கட்டப்படவில்லை?” என மாவட்ட நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்திடம் இருந்து 11 பெண்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகே வீடு கட்ட பணம் கேட்டு விண்ணப்பித்தது, முதல் தவணை பெற்றது போன்ற விவகாரங்கள் கணவன்மார்களுக்கு தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஆண்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து 2ம் தவணை பணம் அனுப்புவதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதேபோன்ற சம்பவம் கடந்த ஆண்டும் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

திறந்தவெளி அரங்கு உட்பட மதுரை கலைஞர் நூலகத்தில் ரூ12.80 கோடியில் கூடுதல் வசதி: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

அணையில் மூழ்கி இன்ஜினியர் பலி

போதையில் படுத்திருந்த திருடன் கார் ஏறியதில் தலை நசுங்கி பலி