அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி சந்திப்பில் உடன்பாடு; ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் விரைவில் விடுவிப்பு: இன்று நடக்கும் உச்சி மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள மோடிக்கு அந்நாட்டு அதிபர் புதின் விருந்து அளித்த நிலையில், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க சம்மதம் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இன்று நடக்கும் உச்சி மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் நடைபெறும் 22வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாஸ்கோ சென்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக ரஷ்ய அதிபர் புதினின் நோவோ-ஓகாரியோவோவில் அதிகாரபூர்வ இல்லத்தில் தனிப்பட்ட முறையில், இரு தலைவர்களின் சந்திப்பு நடந்தது. மோடியை கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் உற்சாகமாக புதின் வரவேற்றார். தொடர்ந்து, பிரதமர் மோடியை அங்கிருந்த எலக்ட்ரிக் காரில் அழைத்துச் சென்ற புதின், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தைச் சுற்றிக் காட்டினார். மோடியை காரில் அமரவைத்து புதினே அந்த காரை ஓட்டினார். பின்னர் மோடிக்கு புதின் இரவு விருந்து அளித்தார். இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் பேசினர். இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட பதிவில், ‘இரண்டு நெருங்கிய நண்பர்களின் நம்பகமான சந்திப்பு நடந்தது.

இந்தியா-ரஷ்யா இடையிலான நட்புறவைப் போற்றவும், கொண்டாடவும் இரு தலைவர்களுக்கும் இதுவொரு வாய்ப்பாக அமைந்தது’ என்றார். மேலும் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘இரு தலைவர்களும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அப்போது, ​​‘நண்பர்களின் வீட்டிற்குச் செல்வது என்பது எப்போதும் நல்லது’ என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடியை பாராட்டிய புதின், ‘ஒரு தலைவராக இந்தியாவுக்கு சிறந்த பணிகளைச் செய்கிறார்’ என்று கூறினார். இந்தியாவின் பொருளாதார நிலையைப் பாராட்டிய புதின், உலக அளவிலான பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்திலும், மக்கள் தொகையில் முதலிடத்திலும் உள்ளது என்றார். மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடிக்கு, ரஷ்ய அதிபர் வாழ்த்து தெரிவித்தார். இரு தலைவர்கள் முன்னிலையில் இன்று பிரதிநிதிகள் அளவிலான விரிவான பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. உக்ரைன் விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியதைத் தொடர்ந்து, அந்நாட்டு ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போர் நடைபெறும் பகுதிகளில் ரஷ்ய ராணுவத்துக்கு உதவியாளர்களாக சுமார் 200 இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். அதையடுத்து ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்கவும், அவர்கள் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்யவும் ரஷ்யா ஒப்புக்கொண்டது. எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்’ என்றன. உக்ரைனுடனான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்தியர்களில் இதுவரை நால்வர் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த மாதம் பதிவிட்டிருந்தது. மேலும், இந்தியர்களை அந்நாட்டின் ராணுவத்தில் பணியமர்த்தக் கூடாதென்பதையும் வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில், மாஸ்கோவில் அதிபர் புதினுடனான இரவு விருந்தின்போது, மேற்கண்ட விவகாரத்தை புதினிடம் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதுவரை ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் 10 இந்தியர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts

ரயில்வே துறையை மறந்ததா ஒன்றிய அரசு?…பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லையே : ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

தனது அரசை காப்பாற்ற வேண்டும் என்று ஒன்றிய பட்ஜெட்டை தயாரித்துள்ளனர்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட செஞ்சி சண்முகம், லாரி ஓட்டுநர் சங்கர் உட்பட 4 பேர் கைது!