பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்

புதுடெல்லி: ஜம்முவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறிய கருத்துக்கள் முற்றிலும் வெறுக்கத்தக்கது மற்றும் அவமானகரமானது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஜஸ்ரோதாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். அப்போது திடீரென அவர் மயக்கமடைந்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள் அவரை ஆசுவாசப்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து பேசிய கார்கே, \”எனக்கு 83 வயதாகிறது. நான் அவ்வளவு சீக்கிரத்தில் இறக்க மாட்டேன். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் இறக்கமாட்டேன்\” என்றார்.

இந்நிலையில் கார்கேவின் கருத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமித் ஷா தனது எக்ஸ் பதிவில்,\”நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது பேச்சுக்கள் முற்றிலும் வெறுக்கத்தக்கதாகவும், அவமானகரமானதாகவும் இருப்பதில் அவரது தலைவர்களையும், கட்சியையும் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டார். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து நீக்கிய பிறகு தான் மரணம் அடைவேன் என்று கூறி தேவையில்லாமல் பிரதமர் மோடியை தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களுக்காக இழுத்துவிட்டுள்ளார். பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சியினருக்கு எவ்வளவு வெறுப்பு மற்றும் பயம் உள்ளது என்பதை கார்கேவின் கருத்துக்கள் காட்டுகின்றது. திரு கார்கேயின் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன். அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்\” என்று குறிப்பிட்டுள்ளார்.

தீவிரமான பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு பதிலடி அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பதிவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் விவகாரம், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட தீவிரமான பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புற கழிவுநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் ஊழியர்களில் 92சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்று உங்கள் அரசின் சொந்த கணக்கெடுப்பு கூறுகின்றது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜ எதிரானது. ஏனென்றால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்தவர்கள் எந்த பணியின் மூலமாக வாழ்வாதாரத்தை கொண்டுள்ளனர் என்பது சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!