பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பிரசாரம் செய்ய தடைக்கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: பிரதமர், முதல்வர், அமைச்சர் ஆகிய முக்கிய பதவியில் இருந்து கொண்டு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் ரமேஷ் தரப்பில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “தேர்தலின் போது பிரதமரோ, முதல்வர்களோ அல்லது அமைச்சர்களோ பதவியில் இருந்து கொண்டு பிரசாரம் செய்ய வரக்கூடாது.

அதற்கு தடை விதிக்க வேண்டும். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானதாகும். ஒருவேளை பிரசாரத்தில் ஈடுபடும் கட்டாயம் ஏற்பட்டால், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பிரசாரம் செய்யலாம். இதுகுறித்த ஒரு உத்தரவை நாடு முழுவதும் ஏற்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி.பி.வரேலா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவில், “செய்தித்தாள்களில் உங்களது பெயர் வர வேண்டும் என்ற விளம்பர நோக்கத்தோடு இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்துள்ளீர்களா?” என மனுதாரருக்கு கேள்வியெழுப்பினர்.

அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மனுதாரர் வைத்துள்ள கோரிக்கையின் சில சாராம்சங்கள் முன்னதாகவே தேர்தல் ஆனையத்தின் சட்ட விதிகளில் உள்ளது” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்த நிலையில், மனுவை வழக்கறிஞர் எம்.எல்.ரவி வாபஸ் பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

 

Related posts

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி

இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார்