பிரதமர் பதவியை நிராகரித்து விட்டேன்: நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு

நாக்பூர்: ‘நீங்கள் பிரதமர் பதவிக்கு வர விரும்பினால் ஆதரவு தருவோம்’ என எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும் ஒன்றிய அமைச்சருமான நிதின் கட்கரி நேற்று முன்தினம் நாக்பூரில் நடந்த பத்திரிகையாளர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ஒரு சம்பவம் இப்போது என்னுடைய நினைவுக்கு வருகிறது. அந்த நபரின் பெயர், எப்போது நடந்தது என்பதை பற்றி கூற மாட்டேன்.

என்னிடம் ஒரு எதிர்க்கட்சி தலைவர், நீங்கள் பிரதமராக விரும்பினால் உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருவோம் என கூறினார். நான் அவரிடம் எதற்காக நீங்கள் என்னை ஆதரிக்க வேண்டும்; உங்கள் ஆதரவை நான் ஏன் பெற வேண்டும் என்று கேட்டேன். பிரதமர் பதவியில் அமர்வது என்னுடைய குறிக்கோள் இல்லை. என்னுடைய நம்பிக்கைக்கும் கட்சிக்கும் விசுவாசமாக உள்ளேன். என்னுடைய நம்பிக்கை முக்கியமானது. பதவிக்காக என்னுடைய நம்பிக்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பர்தனை சந்தித்து பேசியுள்ளேன். விதர்பா பகுதியில் மிக பெரிய அரசியல் தலைவராக இருந்தவர் அவர். ஆர்எஸ்எஸ்சின் எதிர்ப்பாளராக அவர் இருந்தார். நேர்மையான எதிர்க்கட்சியை மதிக்க வேண்டும். நேர்மையாக எதிர்ப்பவர்களை மதிக்க வேண்டும்.

நேர்மையற்ற வகையில் எதிர்ப்பவர்களை மதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கிற தன்னுடைய கொள்கையில் ஏ.பி.பர்தன் உறுதியாக இருந்தார். ஆனால் அரசியல் மற்றும் பத்திரிகையில் தற்போது அவரை போன்றவர்கள் இப்போது இல்லை. நீதித்துறை, நாடாளுமன்றம், நிர்வாக துறை மற்றும் மீடியா ஆகிய 4 தூண்களும் நெறிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே ஜனநாயகம் வெற்றியடையும்’’ என்றார்.

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்