பிரதமர் மோடியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை வாய்திறக்காதது ஏன்? : சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்வீட்

டெல்லி : பிரதமர் மோடியின் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தானில் நேற்று பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். பன்ஸ்வாராவில் நடந்த பிரசார கூட்டத்தில் மோடி பேசுகையில், “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நாட்டின் சொத்துக்களில் சிறுபான்மையினருக்கு தான் முதல் உரிமை என்று கூறியிருந்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தாய்மார்கள், சகோதரிகளிடம் இருக்கும் தங்கத்தை கணக்கெடுத்து அதை மற்றவர்களுக்கு கொடுப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நகர்புற நக்சல் மனப்பான்மை. தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் மாங்கல்யத்தை கூட விடமாட்டார்கள். அந்த அளவுக்கு தரம் தாழ்த்து நடப்பார்கள். மன்மோகன்சிங் சொன்னபடி, சிறுபான்மையினருக்கு தான் நாட்டின் சொத்தில் முதல் உரிமை என்றால், அந்த நகைகளை யாருக்கு கொடுப்பார்கள். அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் முஸ்லிம்களுக்கு, ஊடுருவல்காரர்களுக்குதான் அந்த நகைகள் தரப்படும் என்று பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வெறுப்பை பரப்பும் வகையில் பேசிய பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை வாய்திறக்காதது ஏன்?. ஒரு சமூகத்துக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியது வெட்கக் கேடானது. பிரதமர் மோடியின் செயல் வெட்கக் கேடானது. வெறுப்புணர்வை தூண்டும் மோடியின் பேச்சு தேர்தல் நடத்தை விதியை மீறும் செயல். வெறுப்புணர்வுக்கு எதிரான உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது. கடும் நடவடிக்கையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுக்கப்பட வேண்டும். இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!