பிரதமர் மோடியே மக்களவையில் நடித்து காட்டியவர் தான் : ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து நடித்த எம்பி கல்யாண் பானர்ஜி விளக்கம்

புதுடெல்லி: பிரதமர் மோடியே மக்களவையில் நடித்து காட்டியவர் தான் என்று திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்பி கல்யாண் பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அவையில் விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்தது. இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற நுழைவாயில் படிக்கட்டில் அமர்ந்தபடி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு ராகுல் காந்தி வந்த போது, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்பி கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து நடித்து காட்டினார். முதுகெலும்பை வளைத்து குனிந்து நின்றபடி அவர் ராகுலைப் பார்த்து முதுகெலுப்பு இருக்கிறதா என்பது பற்றி தன்கரை போல நடித்து காட்டினார். இதைப் பார்த்து சக எம்பிக்கள் கைதட்டி சிரித்தனர். ராகுலும் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கு மாநிலங்களவையில் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.இந்த நிலையில், தனது செயல் குறித்து திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்பி கல்யாண் பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஒருவரைப்போல் நடித்து பேசிக் காட்டும் மிமிக்ரி என்பது ஒரு கலை. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் அவரைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர் ஏன் இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டார் எனத் தெரியவில்லை. மக்களவையில் 2014ல் இருந்து 2019ம் ஆண்டு வரை பிரதமர் மோடியே எதிர்கட்சியினரை கிண்டல் செய்து நடித்துக் காட்டியவர்தான்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு

உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: திருச்செந்தூர் சென்று திரும்பிய நிலையில் சோகம்

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு!