வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட விவசாயியிடம் காணொலி காட்சியில் உரையாடினார் பிரதமர்

திருவள்ளூர்: நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் மத்திய அரசு திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளில் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த விவசாயியிடம் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் பொதுமக்கள் பயன்பெறுகிறார்களா என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக காணொலி காட்சி மூலம் மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளிடம் பிரதமர் உரையாடி விவரங்களை கேட்டறிந்து வருகிறார்.

இதற்காக பிரதமர் அலுவலகம் மூலம் மத்திய அரசு திட்டங்களில் பயனடைந்தவர்கள் விவரம் 6 மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் தேர்வு செய்தனர். அதில் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல்குப்பம் கிராமத்தை விவசாயி ஹரிகிருஷ்ணன்(43) தேர்வு செய்யப்பட்டார். இதற்காக திருவள்ளூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பெருமாள்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி வெங்கல்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணனிடம் உரையாடினார். மத்திய அரசின் எந்தெந்த திட்டங்களில் பயனடைந்துள்ளீர்கள்? எப்படி விவசாயத்திற்கு வந்தீர்கள் போன்ற விவரங்களை கேட்டார். அதற்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் பிஎஸ்சி கணிப்பொறியியல் பட்டம் பெற்று ஐசிஐசிஐ வங்கியில் மக்கள் தொடர்பாளராக பணிபுரிந்தேன். இதையடுத்து 2002ல் எனது தந்தை மறைவுக்கு பின் முழு நேர விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது 5 ஏக்கரில் நெல், கரும்பு பயிரிட்டுள்ளேன்.

மத்திய அரசு திட்டங்களான பி.எம் கிசான் திட்டம், பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டம், பி.எம் கிசான் கிரெடிட் கார்டு திட்டம், பிரதமர் குடியிருப்பு திட்டங்களில் பயனடைந்துள்ளேன். நவீன முறையில் பயிர் சாகுபடி உற்பத்தி செய்யும் வகையில் வேளாண், தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பயிற்சியும் பெற்றுள்ளேன். அதற்கு பிரதமர், நமது நாட்டில் விவசாயிகள் முதுகெலும்பாக இருக்கின்றீர்கள்.

மத்திய அரசு திட்டங்களில் அனைவரும் பயன்பெற வேண்டும். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உங்களை போன்ற மக்கள் அனைவரும் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேலும், செலவுகளை குறைத்து உற்பத்தி பொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும், அதற்கான வாய்ப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே நான் பணியாற்றி வருவதாக பிரமதர் தெரிவித்தார். பிரதமர் மோடி உரையாடியது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என விவசாயி ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு