பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்த குமரி கடல்: 3 நாட்கள் பயணமாக நாளை கன்னியாகுமரி வரவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்:

கன்னியாகுமாரி: பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக வரும் 30ம் தேதி கன்னியாகுமரி வரவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தனிமையில் தியானம் செய்யவுள்ளதால், பூம்புகார் சுற்றுலா படகு குழாம் முழுவதுமாக பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்துள்ளது. மேலும், குமரி கடல் பகுதியில் கடற்படையினர் பாதுகாப்பு ரோந்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 18வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் ஏழாவது கட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார்.

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியானம் மண்டபத்தில் தியாநனம் செய்வதற்காக வருகை தருகிறார். அதன்படி வருகின்ற 30ம் தேதி உத்தரபிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் கன்னியாகுமரி வந்து சேர்கிறார். அங்கிருந்து தனி படகில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார். சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பதித்த இடத்தை மலர் வைத்து வணங்குகிறார். அதனைத் தொடர்ந்து 31ம் தேதி முழுவதும் தனிமையில் தியானத்தில் ஈடுபட உள்ளார்.

வரும் 1ம் தேதி வரை கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவர் தங்கி இருக்கிறார். 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவு மண்ட பாறையில் இருந்து வெளியே வரும் அவர் படகு மூலம் கரை திரும்புகிறார். அன்னைய தினம் பிற்பகல் மீண்டும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வழியாக டெல்லி செல்வதாக அவருடைய பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமரின் தியான நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீஸ் வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்புடன் 3 ஆயிரம் போலீசார் இன்று மாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிரதமர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் மே 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா பாறையில் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளதை அடுத்து கடலோர காவல் படை குமரி கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்