பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு 22 ஆயிரம் போலீசார் குவிப்பு: நட்சத்திர ஓட்டல், லாட்ஜ்களில் தீவிர சோதனை

சென்னை: பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில்5 அடுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் 22, 000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நாளை (8ம்தேதி) சென்னை விமானநிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை துவக்க விழா, பல்லாவரத்தில் மாலை நடைபெற உள்ள பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இதனால், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பல்லாவரம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது, அவர் கூறியதாவது: தாம்பரம் மாநகர காவல் கூடுதல் ஆணையர், 3 காவல் இணை ஆணையர்கள், 13 காவல் துணை ஆணையர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவலர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த காவலர்கள் உள்பட 4000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான பல்லாவரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாம்பரம் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். என்றார் இந்நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமை வகித்தார். அதில், உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிரதமர் மோடி வருகையின் போது எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில், அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் என மொத்தம் 22 ஆயிரம் போலீசார் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சிகள் நடைபெறும் விமான நிலையம், எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா விவேகானந்தர் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் அடையாறு ஐஆர்என்எஸ் கடற்படை தளம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், மோடி செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையின் போது, எந்தவித குற்றச்செயல்களும் நடக்காமல் இருக்க சென்னை மாநகரம் முழுவதும் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்