தேசிய விளையாட்டு தினம்.. நாட்டுக்காக விளையாடிய அனைவருக்கும் பாராட்டுகள்: பிரதமர் மோடி வாழ்த்து..!!

டெல்லி: நாட்டுக்காக விளையாடிய அனைவருக்கும் பாராட்டுகள் என தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹாக்கி விளையாட்டின் மந்திர மனிதன் என அழைக்கப்படும் மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான இன்று, அவரை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற தியான் சந்த், 1925 முதல் 1949 வரையிலான ஆண்டுகளில் 185 போட்டிகளில் விளையாடி 1,500 கோல்களை இந்தியாவுக்காக அடித்துள்ளார்.

அவர் விளையாடிய காலத்தில் முறையே 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்கு 3 தங்க பதக்கங்கள் கிடைத்தன. 1956-ம் ஆண்டு அவருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டுக் கழகத்தில் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியதோடு, ராஜஸ்தானில் உள்ள பல பயிற்சி முகாம்களில் பயிற்சியாளராக பணியாற்றினார். அதன் பின் 1979ம் ஆண்டில் டிசம்பர் 3ம் தேதி அவரது 75ம் வயதில் காலமானார். இவரையும், இவரது பெருமையையும் கௌரவிக்கும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டில் இந்திய அரசு அவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது.

இந்த தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியதாவது; அனைவருக்கும் எனது தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள். இன்றைய நாள் நாம் மேஜர் தியான் சந்தை நினைவு கொள்கிறோம். விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் இந்தியாவுக்காக விளையாடிய அனைவரையும் பாராட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பம் தான் இந்த நாள். நம் அரசாங்கம் விளையாட்டை ஆதரிப்பதற்கும், இளைஞர்கள் விளையாடுவதற்கும், அவர்கள் பிரகாசிப்பதற்கான வேலைகளில் நம்முடைய அரசு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என அவர் பதிவிட்டிருந்தார்.

Related posts

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!

கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது

தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!