தமிழகத்தை இதுவரை எட்டிப்பார்த்தாரா? தேர்தல் வந்துவிட்டதால் பிரதமர் மோடி தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார்

*திருப்பத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருப்பத்தூர் : தமிழகத்தை இதுவரை எட்டிப்பார்த்தாரா? வந்தாரா?, தேர்தல் வந்துவிட்டதால் தமிழகத்தை சுற்றி, சுற்றி வருகிறார் பிரதமர் மோடி என்று திருப்பத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ேபசினார்.திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து நேற்று மாலை திருப்பத்தூர் பாய்ச்சல் மேம்பாலம் அருகே தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து கலைஞரின் பேரன் வாக்கு கேட்க வந்துள்ளேன். கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள் அதேபோல இந்த பாராளுமன்ற தேர்தலில் எத்தனை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்கள் என்று மக்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என்றனர்.

சி.என்.அண்ணாதுரையை வெற்றி பெற செய்ய நீங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டீர்கள். இந்த முறை சி.என்.அண்ணாதுரை வெற்றி பெறுவார், நான் மாதத்திற்கு இரண்டு முறை திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு வந்து மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பேன். இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதி. திமுக ஆட்சி அமைத்து 3 வருடங்கள் ஆகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். பிரதமர் மோடி இதுவரை தமிழகத்தை எட்டிப் பார்த்தாரா? தமிழகத்திற்கு வந்தாரா? ஒன்றே ஒன்றுக்கு மட்டும் தான் வந்தார். அது எதற்கு என்றால் இப்பொழுது தேர்தல் வந்துவிட்டது என்ற காரணத்தினால் தமிழகத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

தமிழக முதல்வர் வெள்ளத்தால் பாதித்த குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறார். அதற்காக ₹37 ஆயிரம் கோடி நிதி வழங்க கேட்டார். ஒரு பைசா கூட ஒன்றிய நிதியிலிருந்து வழங்கவில்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமிடம் கேட்டால் நாங்கள் என்ன ஏடிஎம் மிஷினா என்று கேட்கிறார். நீங்கள் ஏடிஎம் மிஷின் கிடையாது. நீங்கள் என்ன உங்கள் அப்பன் வீட்டு பணத்தையா? கொடுக்கிறீர்கள். நான் தமிழக மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இருந்து எங்கள் மக்களுக்கு நிதியை வழங்குங்கள் என்று கேட்டேன்.

அதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உதயநிதிக்கு மரியாதை தெரியவில்லை என்று கூறினார். நான் இப்போது சொல்கிறேன் உங்களுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதையும் கொடுக்கிறேன், எங்கள் மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுங்கள், நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்தேன். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.
மக்களுக்காக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கோயம்புத்தூரில் இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகள் நலமாக இருக்கிறார்களா? என நலம் விசாரித்த ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்று முன்வந்த மக்கள் தமிழ்நாட்டு மக்கள். இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருந்த மக்கள் நீங்கள் தான். இவ்வாறு அவர் பேசினார். அப்போது வந்த ஆம்புலன்ஸ்சுக்கு வழி விட வேண்டும் என்று கூறி, அதிக அளவில் கூட்டம் உள்ளதால் தனது பேச்சை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் என்று அறிவித்து விட்டு சென்றார். இதில் திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்எல்ஏ, நல்லதம்பி எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், நகர செயலாளர் எஸ்ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது