அர்ச்சகர்கள் ஊதியம் ரேசன் போல அளந்து கொடுக்கப்படுகிறது.. வெள்ள சேத ஆய்விலும் தமிழ்நாடு அரசை விமர்சித்த நிர்மலா சீதாராமன்..!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் கோயில் அர்ச்சகர்களுக்கான ஊதியத்தை ரேசன் போல அளந்து கொடுப்பதாக தமிழ்நாடு அரசை விமரிசித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்த நிர்மலா, அறநிலையத்துறையிடம் இருந்து ஊதியம் ஏதும் வராதே என விமரிசித்தார்.

நிர்மலா சீதாராமன் கேள்விக்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அரசின் சார்பிலும் அர்ச்சகர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படுவதாக பதில் அளித்தார். இதை தொடர்ந்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பெருமாள் ஊர்வலம் செல்லும் சாலையை சீரமைத்து தரும்படி அறநிலையத்துறை அதிகாரிக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். அதற்கு எவ்வளவு செலவாகும் என பாஜக எம்.எல்.ஏ. நைனார் நாகேந்திரன் கேட்டபோது குறுக்கிட்ட நிர்மலா அர்ச்சர்களுக்கு ரேசனில் வழங்குவது போல் அளந்து ஊதியம் வழங்குவதால் தெருவை சீரமைக்க தமிழ்நாடு அரசிடம் நிதி இருக்கும் என்றார்.

பாதையை சீரமைக்க ரூ.30,000 வரை பணம் கொடுப்பதாக பக்தர் ஒருவர் கூறிய போது பணத்தை உண்டியலில் போட வேண்டாம் என்றும், எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கே கொடுங்கள் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்யும் போதும் தமிழ்நாடு அரசை நிர்மலா சீதாராமன் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறையும் சொல்லிவிட்டு கேலி, கிண்டல் செய்வதாக நினைக்க வேண்டாம் என்று நிர்மலா கூறியதும் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

Related posts

6 போலீசார் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் வெளி விவகாரம் உள்பட 4 நிலைக்குழுக்களின் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும்

தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்