பணமோசடி தடுப்பு சட்டம் தொடர்பான சீராய்வு மனு மீதான விசாரணை அக்.3க்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு ஒன்றிய அரசால் பணமோசடி தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு, 2005ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டில் பணமோசடி தடுப்பு சட்டம் தொடர்பான திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘ஒன்றிய அரசு கொண்டு வந்த பணமோசடி தடுப்பு சட்டம் செல்லும் என கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம், ஜி.பிரசாந்த் ராஜு உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதனை முன்னதாக பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் அனைத்து தரப்பும் இந்த விவகாரத்தில் குறுகிய அளவிலான வாதங்கள் கொண்ட தொகுப்புகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அதனை அடிப்படையாக கொண்டு தான் விசாரணை நடத்தப்படுவது குறித்து திட்டமிட முடியும் என்று கடந்த மாதம் 7ம் தேதி உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த், சி.டி.ரவிக்குமார் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த விவகாரத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. மேலும் ஒன்பது மனுக்களில் ஒன்று மட்டுமே எங்களிடத்தில் உள்ளது. எனவே வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார். இதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து விசாரணை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்