ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்ட ஏற்பாடு பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்: வெளிநாட்டு தலைவர்கள் உட்பட 8,000 பேர் பங்கேற்பு; டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

புதுடெல்லி: தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்க உள்ளார். ராஷ்டிரபதி பவனில் நடக்கும் விழாவில் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. இவ்விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் உட்பட 8,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால், டெல்லி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.

கடந்த 2 முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜவுக்கு இம்முறை 240 தொகுதிகள் மட்டுமே கிடைத்ததால், கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் பங்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், 16 எம்பிக்களை கொண்ட சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியும், 12 எம்பிக்களை கொண்ட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் முக்கிய இலாகாக்களை கேட்டதால் இழுபறி ஏற்பட்டது.

இரு கட்சிகளுக்கும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிப்பது குறித்து உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு கடிதத்தை தந்த மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, நாட்டின் புதிய பிரதமராக மோடியை நியமித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் இன்று பதவியேற்பு விழா நடக்க உள்ளது. மாலை 7.15 மணிக்கு தொடங்கும் விழாவில், பிரதமராக மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார். பிரதமர் மோடியுடன் அவரது புதிய அமைச்சரவை சகாக்களும் பதவியேற்பார்கள். இதற்கான விழா ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. அண்டை நாடுகளின் தலைவர்கள் உட்பட 8,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கய், ஷெசல்ஸ் துணை அதிபர் அகமது அபிப் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும், பாஜ மூத்த தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி டெல்லி ஜனாதிபதி மாளிகை மற்றும் முக்கிய தலைவர்கள் தங்கியுள்ள ஓட்டல் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்டை நாடுகளின் தலைவர்கள் ராஷ்டிரபதி பவன் வருவதையொட்டி பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

* மம்தா புறக்கணிப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் புதிய எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக மம்தா அறிவித்தார். அவர் கூறுகையில், ‘‘பாஜ கட்சியால் தனிப்பெரும் கட்சியாக முடிந்திருக்காது. தேர்தலில் முறைகேடுகள் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் அவர்கள் 200 தொகுதிகளைக் கூட எட்டியிருக்க மாட்டார்கள்’’ என்றார்.

* எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு வரவில்லை
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று மாலை அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அப்படி அழைப்பு வந்தால், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்’’ என்றார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்