ஜனாதிபதி வழங்கிய கீர்த்தி சக்ரா விருது; ராணுவ கேப்டனின் மனைவி குறித்து அவதூறு: டெல்லி போலீசுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ கேப்டன் அன்ஷுமன் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

கடந்தாண்டு சியாச்சின் பகுதியில் அமைந்துள்ள ராணுவ வெடிமருந்து குடோனில் ஷார்ட் சர்க்யூட் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சக ராணுவ வீரர்களை காப்பாற்றும் முயற்சியில், பஞ்சாப் படைப்பிரிவின் 26வது பட்டாலியன் ராணுவ மருத்துவப் படையின் கேப்டன் அன்ஷுமன் சிங் முயன்றார். துரதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் சிக்கிய அன்ஷூமன் சிங், பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார். இருந்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் வீரமரணமடைந்த கேப்டன் அன்ஷூமன் சிங்குக்கு, கீர்த்தி சக்ரா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்ம வழங்கினார். அந்த விருதை அன்ஷூமன் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் மற்றும் அவரது மாமியார் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் அகமத்.கே என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், ஸ்மிருதி சிங் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை பதிவு செய்தார். இவ்விவகாரம் ெபரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறந்த ராணுவ கேப்டனையும், அவரது மனைவியையும் இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘கீர்த்தி சக்ரா விருது பெற்ற கேப்டன் அன்ஷுமன் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட அகமத்.கே என்ற நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர் மீது சட்டப்பிரிவு 79 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து, விரைவில் அவரை கைது செய்ய வேண்டும். அடுத்த மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையை டெல்லி காவல்துறையிடம் தேசிய மகளிர் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்’ என்று கோரியுள்ளது.

Related posts

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

அமெரிக்காவில் ஆகஸ்டில் வன்முறை நடக்கும்; டிரம்ப் தான் அடுத்த அதிபர்: பிரபல ஜோதிடர் எமி ட்ரிப் கணிப்பு

கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்கிய நிகழ்ச்சி; பாலினத்திற்கும், ஒலிம்பிக்கிற்கும் என்ன சம்பந்தம்?: நடிகையும், எம்பியுமான கங்கனா காட்டம்