பிரேமலதா பேட்டி விஜய் உடனான சந்திப்பு கூட்டணிக்காக அல்ல

சென்னை: விஜய் உடனான சந்திப்பு, கூட்டணிக்காக அல்ல என்று பிரேமலதா கூறினார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் வகையில் 71 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம், வலது கையில் டாட்டுவாக போடும் நிகழ்வு நேற்று நடந்தது. இந்த சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது.

டாட்டு போடும் நிகழ்வை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக வெற்றிக் கழக கட்சிக்கொடி அறிமுகத்திற்கு முன்பாக நடிகர் விஜய் வீட்டிற்கு வந்து கேப்டனுக்கு மரியாதை செலுத்தினார். கேப்டனின் ஆசிர்வாதத்தை வாங்கி சென்றார். விஜய்க்கு தேமுதிக சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள். திரை உலகில் விஜய் நிறைய சவால்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார். அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது.

அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அறிவுரை. விஜய் உடனான சந்திப்பு நட்புணர்வோடு நடந்த ஒரு சந்திப்பு. 2026ம் ஆண்டு அரசியலுக்காக அல்ல. விஜய் எங்களுக்கு புதிது கிடையாது. எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் சாலிகிராமத்தில் தான் பல ஆண்டுகளாக இருந்தார். கேப்டனுக்கும், எஸ்.ஏ.சி.க்கும் இடையேயான நட்பு புதிது இல்லை.

விஜய் எப்பொழுதும் எங்கள் வீட்டிற்கு வருவது போன்று, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்று தான் வந்துள்ளார். டாட்டு போடும் நிகழ்வு திடீரென்று இன்று தயார் செய்தது கிடையாது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே பலர் விருப்பம் தெரிவித்து இருந்தனர். அனைத்து வகையான பாதுகாப்போடுதான் டாட்டு போடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?