சாமியாரின் பேச்சை கேட்டு வெளிநாடு செல்ல தயாராகி கொண்டிருக்கும் புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘விதிகளை பற்றி கவலைப்படாமல் கல்லா கட்டினாராமே ஒரு பட்டாசு அதிபர்..’’ என்று ேகட்டார் பீட்டர் மாமா. ‘‘மெடல் மாவட்டத்தின் தீப்பெட்டி – வெள்ளரி நகரங்களுக்கு இடைப்பட்ட சாலையில்தான் இலைக்கட்சியின் ஒன்றிய நிர்வாகியின் பட்டாசு ஆலை இருக்கிறது. இங்கே தடைசெய்த சரவெடி பட்டாசுகள் தயாரிப்பு உள்ளிட்ட ஏராளமான விதிமீறல்கள் இருப்பதாக புகார்கள் குவிந்தன. ஆனாலும், இங்கே அதிகாரிகள் ரெய்டு போவதற்கும் முன்பே, இலைக்கட்சி ஆதரவு அதிகாரிகள் இவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விடுவதால், எந்தக் கவலையும் இல்லாமல், விதிமீறல் தொடர்கிறதாம். ஆதரவு அதிகாரிகளிடம் இருந்து தகவல் வந்ததும், மறைக்க வேண்டியதை எல்லாம் மறைத்து விட்டு ரெய்டில் இருந்து லாவகமாக தப்பி விடுவாராம்.

ஒவ்வொரு முறையும் இதே கதைதான் நடக்கிறது என்று இந்த மாவட்டத்து நேர்மையான பட்டாசு அதிகாரிகள் மனம் நோகின்றனர். அதேசமயம், ஏராளமான விதிமுறை மீறல்கள் இருப்பினும் இவர் மீது எந்த நடவடிக்கையும் பாயாதது கண்டு, பக்கத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். இலைக்கட்சி ஆதரவு அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு இந்த தீபாவளி பட்டாசு சீசனில் பல கோடி வருவாய் பார்த்திருப்பதாக, இவர் மீதான புகார்களின் பேரில், அதிரடி சோதனை நடத்தி, நடவடிக்கை எடுக்க ஒரு தனிக்குழு தயாராகி வருகிறதாம். தீபாவளி முடிந்து விட்டதால், இனி எப்போது வேண்டுமானாலும் இந்த குழு அதிரடியாக வரலாம் என்பதையும் ஆதரவு அதிகாரிகள் தெரிவித்திருப்பது, இவரது வயிற்றில் புளியை கரைத்திருக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டெல்டாவில் சேலத்துக்காரருக்கு எதிராக வியூகம் வகுக்க தயாராகி கொண்டிருக்கும் வைத்தியானவர் பற்றி சொல்லுங்க..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சேலம்காரர் கை ஓங்கியதும் தேனிக்காரர் அதிரடியாக நீக்கப்பட்டார். இலை கட்சியில் தன்னை நீக்கியது செல்லாது என நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த தேனிக்காரர், கட்சியில் நான் தான் ஒருங்கிணைப்பாளர் என கரைவேட்டி அணிந்து வந்ததோடு காரில் இலை கட்சி கொடியுடன் வலம் வந்தார். ஆனால் ஐகோர்ட் உத்தரவிற்கு பின்னர் தேனிக்காரர் கரை வேட்டி மாறியது. காரில் கொடி இல்லை. இதனால் தேனிக்காரரின் ஆதரவாளர்களின் நிலைமை அதோகதியாகி விட்டது. டெல்டா மாவட்டத்தில் தேனிக்காரருக்கு, சேலம்காரரர் அளவுக்கு செல்வாக்கு இல்லாமல் ஓரளவு செல்வாக்கு இருந்து வந்தாலும் கட்சியும் இல்லை. காரிலும் கொடியும் இல்லை. எந்த கொடியை காரில் கட்டுவது, எந்த கரைவேட்டியை கட்டி வெளியில் நடமாடுவது, நிகழ்ச்சிகளுக்கு செல்வது என நிர்வாகிகள் அவர்களுக்குள் புலம்புகிறார்களாம்…

இந்த தகவல் தேனிக்காரருக்கு தெரிய வர அவர், சேலத்துக்காரருக்கு எதிராக வியூகம் வகுக்க முடிவு செய்துள்ளார். குறிப்பாக, இலை கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருந்த போது அப்போது நடந்த சம்பவங்களை வெளிக் கொண்டு வர தேனிக்காரர் ஐடியா செய்துள்ளார். அதற்கான வேலையில், தேனிக்காரர் டீம் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். டெல்டா மாவட்டத்தில் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க நெற்களஞ்சியம் மாவட்ட மாஜி அமைச்சர் வைத்தியானவர், சேலத்துக்காரருக்கு எதிராக அதிரடியாக இறங்க முடிவு செய்துள்ளார். டெல்டா மாவட்டத்தில் அதிருப்தி மற்றும் கட்சியில் ஒதுங்கி இருக்கும் நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்து தேனிக்காரர் அணி பக்கம் இழுக்கும் முயற்சியில் வைத்தியானவர் முடிவு செய்துள்ளார். இதனால் மீண்டும் நிர்வாகிகள், தொண்டர்களை இழுக்கும் பேரம் டெல்டாவில் விறுவிறுப்பு அடைந்துள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெளிநாடு பறக்க தயாராகிட்டு இருக்காராமே புல்லட்சாமி. உண்மையா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி முதல்வர் புல்லட்சாமி, கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர். எந்த நல்ல விஷயங்கள் செய்யவும் நேரம் காலம் பார்த்துதான் செய்வார். சடங்குகள் அதுசார்ந்த மத நம்பிக்கைகளுக்கும் அதிக இடமளிப்பார். இதற்கென புல்லட்சாமி தனக்கென ஆஸ்தான ஜோதிடர் குழுவையும் வைத்துள்ளார். அவ்வப்போது அவர்கள் கூறும் பூஜைகள், யாகங்களை தட்டாமல் செய்வார். கடந்த சில வாரங்களுக்கு முன், சாமியின் நம்பிக்கைக்குரிய ஜோதிடரின் கூற்றுப்படியும், ராகு கேது பெயர்ச்சியையொட்டி திருப்பாம்பரம், திருப்புவனம் சரபேஸ்வரர், சிதம்பரம் தில்லை காளி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று பூஜைகள் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கோயில்களுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய புல்லட்சாமி, ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என அமானுஷ்ய பூஜையையும் நடத்தி முடித்துள்ளாராம். அப்போது அருள் வாக்கு சொன்ன சாமியார், நாடுவிட்டு நாடு, கடல் தாண்டி ஒரு இரவு தங்கி விடடு வந்தால்தான் புல்லட்சாமியின் தோஷம் விலகும் என கூறிவிட்டாராம். உடனே இதனை நிறைவேற்ற டிக்கெட் போடச்சொல்லிட்டாராம். எந்த நாட்டுக்கு என கேட்டுள்ளனர். எப்பவும் புதுச்சேரியுடன் வரலாற்று தொடர்பில் இருக்கும் பிரான்சுக்கு போடுங்கள் என கூறியுள்ளாராம். அங்கு நண்பர்கள் சிலர் உள்ளனர். அவர்களையும் பார்த்துவிட்டு வரலாம் என திட்டம் போட்டிருக்கிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு