பிரார்த்தனைகளுக்கு பதில் உண்டு

பிரசவ வலி வந்ததும் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையை பெற்றெடுத்தார் அந்த தாய். ஓரிரு தினங்களில் வீடு திரும்பும்படி உத்தரவும், கூடவே மருத்துவக் கட்டணங்களை தாங்கிய ஒரு சீட்டும் குழந்தையின் தகப்பனிடம் கொடுக்கப்பட்டது. அதில் எழுதப்பட்டிருக்கும் தொகையை விட ஆயிரம் ரூபாய் குறைவாகத்தான் கையில் இருந்தது. தனது பொருளாதார சூழ்நிலையை மருத்துவர்களிடம் எடுத்துரைத்தும் பயனேதுமில்லை. இன்னும் ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டு உங்க மனைவியையும் பிள்ளையையும் அழைத்துச் செல்லலாம் என காட்டமாக கூறி சென்றார் கட்டண வசூலிப்பாளர்.1996- ஆம் ஆண்டு அக்டோபர் 17- ஆம் தேதியில் இரவு நேரம் வானம் மட்டுமல்ல அந்த தகப்பனுக்கு மனமும் இருண்டுபோன தருணமாக அமைந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை, யாரிடத்திலும் உதவி கேட்டும் பழக்கமில்லை. காரிருள் சூழ்ந்த தருணத்தில் தான் இருந்த அறையின் ஓரம் சென்று, முழங்காலில் நின்று தன் தேவனை நோக்கி ‘‘கண்ணீரெல்லாம் துடைப்பார்’’ என்ற பாடலை பாடி கதறி அழ ஆரம்பித்தார். அதிகாலை நேரம், சூரியன் உதயமாகும் முன் ஒருவர் வந்து பரபரப்பாக தேடிக்கொண்டே தகப்பனாரின் பெயரைச் சொல்லி அழைக்கிறார்.அந்த நேரத்தில் தான் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

என்றோ ஒரு ஏதோவொரு தருணத்தில் தங்களிடம் பெற்ற பணத்தை திருப்பி கொடுக்குமாறு இரவு முழுவதும் எனது மனதில் ஒரு உணர்வு இருந்ததாகவும், அதனால் தான் நீங்கள் இருக்கும் இடத்தை தேடி விசாரித்து இந்த அதிகாலை நேரத்தில் வந்திருப்பதாகவும் கூறி, தகப்பனின் கரங்களை பிடித்து ரூபாய் நோட்டுகளை திணித்துச் சென்றார்.முழங்காலில் கண்ணீர் மல்க ஜெபித்தவரின் கண்ணீர் காயும் முன்பாக தேவன் தமது சார்பில் ஒருவரை அனுப்பி தேவைகளை பூர்த்தி செய்ததுடன் மீதமும் எடுக்கவைத்தார். இரவில் கண்ணீருடன் ஜெபத்தை ஆரம்பித்தவர் அதிகாலையில் நன்றியுடன் தேவனை பணிந்து, மனைவி மற்றும் பச்சிளங்குழந்தையுடன் சந்தோஷமாக வீடு திரும்பினார்.இறைமக்களே, இறைவேதம் தேவனுக்கு வழங்கும் பெயர்களில் ஒன்று ‘‘ஜெபத்தைக் கேட்கிறவர்’’ (சங்.65.2) என்பதாகும். மேலும் அவர் ‘‘திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்’’ (சங்.102:16) என்றும் இறைவேதம் எடுத்துரைக்கிறது. நமது இயலாமைகளை, பெலவீனங்களை, தேவைகளை எல்லா சந்தர்ப்பங்களிலும் மனிதர்களால் புரிந்துகொள்வது சாத்தியமல்ல, ஆகவே தீர்வை இறைவனிடம் மட்டுமே நாட வேண்டும். பாரபட்சம் பாராத இறைவன் உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிப்பது நிச்சயமே!‘‘அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்’’ (சங்.91:15) என்பது இறைவன் நமக்கருளும் வாக்குறுதியாகும்.

– அருள்முனைவர் பெவிஸ்டன்.

Related posts

பாண்டுரங்கன் வருகை

வாஸ்து நாள் என்றால் என்ன?

திருவல்லிக்கேணியும் திருவீதிஉலாவும்