பட்டையக் கிளப்பும் ப்ரான் பைட்ஸ்…மணமணக்கும் மண்சட்டி மீன்குழம்பு…

பட்டையக் கிளப்பும் ப்ரான் பைட்ஸ்…மணமணக்கும் மண்சட்டி மீன்குழம்பு…

கல்லூரியில் படிக்கும்போது தொடங்கிய ஐடியா, இப்போது ஒரு அடையாளமாகி இருக்கிறது அரவிந்த் சுரேஷ்- ரிச்சி ரிச்சர்ட் என்ற இரு நண்பர்களுக்கு. நமது கிராமத்து ஸ்பெஷலான மண்சட்டி மீன் குழம்பை ஆன்லைனில் சப்ளை செய்து வந்த இவர்கள், இப்போது வேளச்சேரி 100 அடி சாலையில் ஒரு உணவகத்தையே தொடங்கி இருக்கிறார்கள். மண்சட்டி என்ற பெயரிலேயே தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகம், அசைவப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே விளங்கி வருகிறது. “ நாங்கள் இருவரும் பிபிஏ படித்திருக்கிறோம். இது முழுக்க முழுக்க பிசினஸ் சம்பந்தப்பட்ட படிப்பு. கல்லூரியில் இருந்துதான் எங்களின் நட்பு தொடங்கியது. கல்லூரி முடித்த பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பிசினஸ் நடத்த வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருந்தோம். அதில் நமக்கென்று ஒரு லேபிளை கிரியேட் செய்ய வேண்டும், அதை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தோம். இதனால் பிசினஸ் சம்பந்தமாக பல தேடல்களில் இறங்கினோம்.

நாங்கள் செய்யும் பிசினஸ் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதையும் டார்கெட்டாக வைத்திருந்தோம். அப்போது நாம் உணவு சம்பந்தப்பட்ட தொழில்தான் செய்ய வேண்டும் என ரிச்சர்ட் கூறினார். எனக்கும் அந்த ஐடியா பிடித்திருந்தது. சரியென்று இருவரும் முடிவு செய்து உணவகம் திறப்பதற்கான வேலைகளில் இறங்கினோம். அப்போது எங்களுக்கு ஒரு பெரிய பர்கர் நிறுவனத்தின் ஃப்ரான்சைஸ் எடுத்து நடத்துவதற்கான வாய்ப்பு வந்தது. அதற்கு 40 லட்சம் செலவு ஆகும் என்றார்கள். சரி எதற்கு ஒரு பிரட்டை விற்பதற்கு இந்த அளவு இன்வெஸ்ட் செய்ய வேண்டும்? அதுவும் இல்லாமல் இது உடலுக்கு ஆரோக்கியம் இல்லாத உணவும் கூட. இதனால் நம்ம ஊர் ஸ்டைல் உணவகம் ஒன்றை திறக்கலாமே என ரிச்சர்ட்டிடம் தெரிவித்தேன். அவரும் சரி என்றார். எங்கள் வீட்டின் ஸ்பெஷலே மீன் குழம்புதான். எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் அனைவருமே அம்மா தயார் செய்கிற மீன்குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள். இதை ஏன் நீங்கள் தொழிலாக செய்யக் கூடாது என கேட்பார்கள்.

அப்போதெல்லாம் எங்களுக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் நாமே உணவு தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என முடிவு எடுத்ததற்கு பிறகு அம்மாவின் ஸ்பெஷலான மண்சட்டி மீன் குழம்பையே விற்பனை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தோம். முதலில் ஈக்காட்டுத்தாங்கலில் க்ளவுடு கிச்சன் மூலம் வீட்டு முறையில் உணவினை தயார் செய்து விற்பனை செய்தோம். ஆரம்பத்தில் கொடுவா மட்டும்தான் கொடுத்து வந்தோம். அதையும் ஒரு குடும்பத்திற்கு தேவையான அளவு கொடுக்கத் தொடங்கினோம். ஒரு பார்சலில் சாப்பாடு, மண் சட்டியில் வைத்த மீன்குழம்பு, ரசத்தோடு சேர்த்து ஒரு கிலோ கொடுவா மீன் இருக்கும் அளவிற்கு பார்சல் கொடுப்போம். நம்மை நம்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் திருப்தியாக சாப்பிட வேண்டும் என்பதற்காக மீன் குழம்பில் கொடுவா மீனின் தலை மற்றும் 4 துண்டுகள் வைத்துக் கொடுப்போம். அதனுடன் ஆறு வறுத்த மீன் துண்டுகள், ரசம், ஒன்றரை கிலோ சாதம், நான்கு ஸ்வீட் பீடாக்கள் இருக்கும்.

குறிப்பாக மீன் குழம்பை மண்சட்டியிலேயே பேக் செய்து அனுப்புவோம். அதற்கென்று பிரத்யேகமாக தயார் செய்த கொட்டாங்குச்சியில் செய்த ஒரு கரண்டியும் கொடுப்போம். இந்தப் பார்சலை வாடிக்கையாளர்கள் திறந்து பார்க்கும்போது ஒரு கிராமத்தில் இருந்து மீன் குழம்பு பார்சல் வந்தது போல உணர்வார்கள். இந்த மண்பானைக் குழம்பு அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நேரடியாக மண்பானை தயார் செய்யும் தொழிலாளர்களிடம் இருந்து மண்பானையை வாங்கலாம் என யோசித்தோம். இதன்மூலம் அவர்களுக்கும் ஒரு வாழ்வாதாரம் கிடைக்கும் என்பதால் மண்பானை செய்யும் பலரிடம் பேசினோம். நாங்கள் ஒரு டிசைன் செய்து கொடுத்தோம். அதற்கு ஏற்ப மண்பானை தயாரித்துக் கொடுத்தனர். பார்சல் மூலம் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு லட்சம் மண்பானைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளோம். கொரோனா காலத்திற்கு முன்பு உணவகமாக தொடங்க வேண்டும் என்ற எங்களது ஆசை தற்போது நிறைவேறி இருக்கிறது.

க்ளவுடு கிச்சன் மூலம் கிடைத்த வருமானத்தில் அடுத்தடுத்து ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் வேளச்சேரியில் மீன் சட்டி உணவகங்களைத் தொடங்கியுள்ளோம். இந்த உணவகத்தின் அமைப்பைக் கூட கடல் போன்ற செட்டப்பில் ஏற்படுத்தியுள்ளோம். ஒருபுறம் கரையைக் குறிப்பிடுவது போல ப்ரவுன் கலரிலும், மற்றொரு புறம் கடல் போல நீல வண்ணத்திலும் டைனிங் செட்டப் செய்திருக்கிறோம். உணவகம் பெரிதாக இருந்தாலும் இருக்கைகளை 40 என்ற கணக்கில் அமைத்துள்ளோம். சிட்டி வாழ்க்கையில் அலுப்பாக வரும் மக்கள், நமது உணவகத்தில் திருப்தியாக உட்கார்ந்து சாப்பிடும் வகையில் இதைச் செய்திருக்கிறோம்’’ எனும் அரவிந்த் சுரேஷைத் தொடர்ந்து, ரிச்சி ரிசர்ட் பேச ஆரம்பித்தார். “ மீன் சட்டி உணவகம் தொடங்கிய சிறிது நாட்களிலேயே இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இதன்மூலம் எங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. மீன் உணவுக்கென்று ஒரு மார்க்கெட் இருப்பதையும் உணர்ந்தோம். மேலும், எங்கள் வாடிக்கையாளர்கள் பலரும் வேறு சில கடல் உணவுகளையும் சமைத்துத் தரும்படி கேட்க தொடங்கினர்.

தற்போது இறால், கனவா, நண்டு போன்ற மற்ற கடல் உணவுகளையும் சமைத்து வழங்கி வருகிறோம். 6 டிஷ்ஷில் தொடங்கிய எங்கள் மீன் சட்டி உணவகம், இன்று 99 டிஷ் என உயர்ந்திருக்கிறது. தற்போது மீன் மற்றும் முட்டை கலந்த சூப், நண்டு சூப், இறால் சூப் தொடங்கி, கறிவேப்பிலை பாரா மீன் ஃப்ரை, லெமன் கார்லிக் பேரேட் பிஷ் ஃப்ரை, புதினா ஃபிஷ் ஃப்ரை, லேடி ஃபிஷ் தவா ஃப்ரை, பெப்பர் ப்ரான் 65, நண்டு சீஸ் பால்ஸ், மீன் தலையுடனான மீன் குழம்பு, கார மீனில் பத்ய மீன் குழம்பு, நெத்திலி குருமா, இறால் சோறு, கனவா வாணல் சோறு, பழைய சோறு கருவாடு தொக்கு, மீன் சோறு என பலவும் வழங்குகிறோம். டிபன் வகைகளில், சுறா கொத்து பரோட்டா, சுறா புட்டு தோசை, இட்லி மீன் குழம்பு காம்போ என சுமார் 99 வகையான கடல் உணவுகளைத் தருகிறோம். இது தவிர, கடல் விருந்து என சுமார் 16 அயிட்டங்கள் கொண்ட காம்போவும் வழங்குகிறோம். இதில் சாதம், குழம்பு வகைகள், பொரித்த மீன் வகைகள், ரசம், நன்னாரி சர்பத் மற்றும் ஸ்பெஷல் ஸ்வீட் பீடா ஆகியவை இருக்கும்.

எங்கள் உணவகத்தில் சிக்னேச்சர் டிஷ் என்றால் எம்பெரர் ஹோம் ஸ்டைல் தவா ஃபிஸ் ஃப்ரை, எம்பெரர் புதினா ஃபிஸ் ஃபிரை, காரா மீன் தவா ஃப்ரை, சாஃப்ட் செல் கிராப்ட் நண்டுன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. நாங்கள் கொடுக்கும் பழைய சோறு, கருவாட்டு தொக்கிற்கென்று ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. குழந்தைகளைக் கவரும் விதமாக ப்ரான் பைட்ஷும் கொடுக்கிறோம். இந்த டிஷ்ஷில் டேஸ்ட்டிற்கு முக்கியப் பங்கு வகிப்பது சீஸ்தான். ஒரு பெரிய காயின் அளவில் உள்ள குட்டி பரோட்டாவில், மசாலாவோடு ப்ரானை சேர்த்து, அதன் மீது சீஸ் போட்டு நேரடியாக டைனிங் டேபிளில் வைத்தே நெருப்பில் சுட்டுத் தருகிறோம். இந்த டிஷ்ஷை ஒரு டேபிளில் ஆர்டர் செய்தால் மற்ற டேபிளில் இருப்பவர்களும் வாங்கிச் சாப்பிடுவார்கள். க்ளவுடு கிச்சன் மூலம் தொடங்கிய எங்கள் உணவகப் பயணம் இன்றைக்கு இரண்டு பிரான்ச் அமைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. எங்களது லேபிளை அனைத்து பகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் ஆன்லைனில் தனி வெப்சைட் தொடங்கினோம். இதனைப் பார்த்த வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் இதுபோன்று ஒரு உணவகம் இங்கேயும் இருந்தால் நன்றாக இருக்கும் என மெயில் செய்கிறார்கள். நாங்கள் எங்கள் மீன் சட்டி உணவகத்தை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குவதற்கான வேலைகளிலும் இறங்கி இருக்கிறோம். கூடிய விரைவில் இதனையும் சாத்தியப்படுத்திக் காட்டுவோம்’’ என நம்பிக்கையுடன் கூறி முடிக்கிறார் ரிச்சி ரிச்சர்ட்.

– சுரேந்திரன் ராமமூர்த்தி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை