பிரசந்தா பதவி விலக வேண்டும்; நேபாளி காங்கிரஸ் கோரிக்கை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிரதமர் முடிவு?

காத்மாண்டு: நேபாள பிரதமர் பிரசந்தா பதவி விலகி புதிய அரசு அமைய வழிவிட வேண்டும் என்று எதிர்கட்சியான நேபாளி காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் பிரதமர் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரசந்தாவின் சிபிஎன்(மாவோயிஸ்ட் சென்டர்) கட்சியுடன் பல்வேறு கட்சிகளும் அரசில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதுார் தூபாவும்,சிபிஎன்(யுஎம்எல்) கட்சி தலைவர் கே.பி.சர்மா ஒலியும் திங்கள் கிழமையன்று ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி இரு தலைவர்களும் கூட்டணி ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

நேபாளி காங்கிரசுக்கு 89 எம்பிக்களும், சிபிஎன்(யுஎம்எல்) 78 எம்பிக்களும் உள்ளனர். 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்கள்(167)இரு கட்சிகளுக்கும் உள்ளதால் எளிதாக ஆட்சி அமைக்க முடியும். ஆனால் கூட்டணி கட்சிகளின் நெருக்கடிகளுக்கு உள்ளான பிரசந்தா பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று தெரிவித்தார். இந்நிலையில்,நேபாளி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின், பேசிய அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் சரண் மகாத்,‘‘நாடாளுமன்றத்தில் உள்ள பெரிய கட்சிகளான நேபாளி காங்கிரஸ்-யுஎம்எல் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு வசதியாக பிரசந்தா பதவி விலக வேண்டும். பிரசந்தா ஒத்துழைக்கா விட்டால் அரசியல் சட்ட விதிகளின்படி ஆட்சி அமைப்போம்’’ என்றார்.

திடீர் அரசியல் மாற்றங்களையடுத்து தன்னுடைய சிபிஎன்(மாவோயிஸ்ட் சென்டர்) கட்சி நிர்வாகிகளுடன் பிரசந்தா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

கன்னியாகுமரியில் பிரபல ரவுடி கைது..!!

திருச்சி அருகே பரபரப்பு; சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி