இஸ்ரோ விஞ்ஞானிகள் குறித்து கேலி சித்திரம்; சர்ச்சையில் சிக்கினார் பிரகாஷ்ராஜ்: போலீசில் புகார்

சென்னை: இஸ்ரோ விஞ்ஞானிகள் குறித்த கேலிச்சித்திரத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டிருந்தார். இது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘முக்கிய செய்தி. வாவ்.. விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் இருந்து வரும் முதல் படம்’ என குறிப்பிட்டு நிலவில் ஒருவர் டீ போடுவது போல் கார்ட்டூனை போட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரசனைக்குரிய படம் அல்ல இது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பை கொச்சைப்படுத்தும் செயல் என பலரும் பிரகாஷ்ராஜுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு பிரகாஷ் ராஜ் பதில் அளித்துள்ளார்.

‘‘வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கிறது. நான் குறிப்பிட்டது ஆம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவையை. கேரள சாய்வாலாவை இதில் கொண்டாடியிருக்கிறேன். ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்னை. வளருங்கள்’’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் சந்திராயன்- 3 மூலம் எடுத்த முதல் புகைப்படம் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் கைலாச வடிவு சிவன் டீ ஆற்றுவது போல இஸ்ரோ விஞ்ஞானிகளை கிண்டலடித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் தியாகத்தை போற்றவில்லை என்றாலும், சாதனைகளை வாழ்த்தவில்லை என்றாலும், அவர்களின் திறமையை, இந்தியாவின் வளர்ச்சியை கேலியும் கிண்டலும் செய்வது தேச விரோதமாகும். இதுபோன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடும் சினிமா நடிகர் பிரகாஷ்ராஜை தேச விரோத வழக்கில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா