பவர்புல் பெண்மணி கரன்சியை வாரி இறைக்கும் மர்மம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கொளுத்தி போட்டதற்காக பொங்கு பொங்குன்னு பொங்குனாராமே..’’ என்று ஆரம்பித்தார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரரின் குரலாக ஒலித்து, தாமரை கட்சியின் பிரதர் மவுண்டன் லீடரை வம்படியாக சீண்டுபவர் கிரி மாவட்டத்தின் சாமியான மாஜி. லேட்டஸ்டாக தாமரை கட்சியின் கடந்த கால வரலாறு குறித்தும், மூத்த தலைவர்கள் குறித்தும் பிரதர் மவுண்டனுக்கு எதுவும் தெரியாது என்று கொளுத்திப் போட்டிருக்காராம் அவரு. தென்னிந்தியாவில் தாமரை கட்சியை அறிமுகப்படுத்தினதே எங்க மம்மிதான். இன்னிக்கு அவங்க ஒரு கட்டிடம் கட்டி கட்சி நடத்துவதற்கும் காரணம் மம்மி தான்.

இதுவெல்லாம் அந்த நேரத்தில் ஸ்கூல் அல்லது காலேஜிக்கு போய் கிட்டிருந்த பிரதர் மவுண்டனுக்கு தெரிய வாய்ப்பில்லை. மம்மியை பத்தியும், இலைகட்சியின் பவரை பத்தியும் முன்னாள் டெபுடி பி.எம்.மாக இருந்த மூத்த தலைவரிடம் கேட்டு தெரிஞ்சுக்கணும். அதுக்கு அப்புறம் யோசிச்சு, எங்க கட்சியை பத்தி பேசணும். இல்லாட்டி வேற மாதிரி பதிலடி இருக்கும் என்று ஏகத்துக்கும் பொங்கினாராம் அவரு. இது ஒரு புறமிருக்க, இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உடனடியாக களமிறங்கினாராம் உள்ளூரை சேர்ந்த மாஜி எம்பி ஒருத்தரு.

இப்போது தாமரையின் மாநில செய்தி தொடர்பாளராக இருக்கும் அவரு, ‘எங்க கட்சியை பத்தியும், லீடரை பத்தியும் பேசுவதற்கு நிறம் மாறும் மாஜிக்கு எந்த தகுதியும் இல்லை என்று மீடியாக்களிடம் பொங்கி விட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நகர் ஆட்சியில கோப்புகள் மாயமாகிட்டே இருக்குதாமே…’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டத்துல வந்தா வாசி என்ற நகர் ஆட்சி இருக்குது. இங்க கோப்புகள் எல்லாம் அடிக்கடி காணாம போகுதாம். தபால் பிரிவுல இருந்து சம்மந்தப்பட்ட ஆபீசர்களுக்கு பைல்ஸ் போகுதாம். ஆனாலும் சில ஆபீசர்ஸ், பைல் இன்னும் வரவே இல்லையே, பைல காணோமேன்னு சொல்றாங்களாம்.

வேலை செய்ய ஓபி அடிக்குறதுக்கு இப்படி ஒரு சாக்கு போக்கு செல்லி மாசக்கணக்குல காலம் கடத்துறாங்களாம். சரண்டர் லெட்டரு, டெண்டர் பில்லுன்னு எது கேட்டாலும், தொலைஞ்சு போச்சுன்னு சொல்றாங்களாம். இப்படி கோப்புகளும், பில்களும் மாயமாகுறதை கண்டுபிடிச்சு, யார் தான் நடவடிக்கை எடுக்கப்ேபாறாங்களோ தெரியலையேன்னு பாதிக்கப்பட்ட ஜனங்களும், நகர் ஆட்சியில இருக்குற பணியாளருங்களும் புலம்பிவர்றாங்க. இதனால சம்மந்தப்பட்ட அதிகாரிங்க, அந்த நகர் ஆட்சியில என்னதான் நடக்குதுன்னு திடீர் ஆய்வு செஞ்சி, கோப்புகளை சரிபார்த்து, இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கணும்னு கோரிக்கை குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரையின் பாதயாத்திரைக்கு கரன்சியை வாரி இறைத்த யூனியன் பிரதேச பவர்புல் பெண்மணி பற்றி சொல்லுங்களேன்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தில் தாமரை கட்சி தலைமை நடத்தும் யாத்திரைக்கு போதிய வரவேற்பும், கூட்டமும் இல்லாத நிலையில் தேர்தல் நேரத்தில் செல்வாக்கை அதிகரிக்க கரன்சியை இறைத்து கூட்டத்தை சேர்த்தும், தடபுடல் வரவேற்பு செய்யப்பட்டு வருகிறதாம். புரம், கடலூர் மாவட்டத்தில் நடந்த பாதயாத்திரைக்கு கூட்டம் சேர்க்கவும், வரவேற்புக்கும் பக்கத்து மாநிலமான யூனியன் பிரதேசத்தை சேர்ந்த பவர்புல் பெண்மணி கரன்சியை வாரி இறைத்திருக்கிறாராம்.

யாத்திரை நடக்கும் மாவட்ட, மாநில நிர்வாகிகளை அழைத்து யாத்திரையை சிறப்பா நடத்தனும், கூட்டம் சேர்க்கனும்னு கூறி கரன்சியை வாரி வழங்கியிருக்கிறாராம். இதில் பாதியை சுருட்டிய நிர்வாகிகள் மீதி பணத்திற்கு வரவேற்பு, ஆட்களை அழைத்து வந்திருந்தார்களாம். பவர்புல் பெண்மணி தமிழகத்தில் மக்களவை தேர்தலில் சீட்டுக்கு முயற்சித்து வரும் நிலையில், தற்போது கரன்சியை வாரி இறைத்திருப்பதன் மூலம் தேர்தலில் போட்டியிடப் போவதை உறுதி செய்திருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி விவிஐபி வீட்டு பக்கத்துல குக்கர் சத்தமா விசில் அடிச்சிதாமே, தெரியுமோ உங்களுக்கு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகரில் உள்ள இலைக்கட்சி விவிஐபி வீட்டின் பக்கத்திலேயே, குக்கர் கட்சிக்காரங்க நாடாளுமன்ற தேர்தல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்த கூட்டினாங்களாம். அவரோட வீட்டை சுற்றி கட்சி கொடியை கட்டி அலப்பறை செய்தாங்களாம். அதோட மட்டுமில்லாம, குக்கர் கட்சி மா.செ.,க்கள் எல்லாம் மைக்கை பிடித்து, உண்டு இல்லன்னு பண்ணிட்டாங்களாம். ஊர்ந்து வந்தவரு, துரோகி என்றெல்லாம் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி, குக்கர் கட்சி ஹெட்டை மனம் குளிர செஞ்சாங்களாம்.

கடைசியா மைக்கை பிடிச்ச குக்கர் கட்சி ஹெட்டும், தன் பங்கிற்கு இலைக்கட்சி விவிஐபியை வறுத்தெடுத்தாராம். மதுரை மாநாட்டை புளியோதரை மாநாடுன்னு சொல்ல, கூட்டத்தில் இருந்த குக்கர் தொண்டர்களிடம் இருந்து விசில் பறந்துச்சாம். கடைசியா கூட்டம் முடிந்து போறப்ப, எப்புடி நம்ம தலைவரு இலைக்கட்சி விவிஐபி காதுக்குள்ள வந்து விசில் அடிச்சுட்டு போயிட்டாருன்னு தொண்டர்கள் சிலாகிச்சு பேசிக்கிட்டாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தனியா போராட்டம் அறிவிச்சுட்டு, மாவட்ட முக்கிய நிர்வாகியிடம் பணிந்து போனாராமே பொன்னார்…’’

‘‘குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் எடுத்து செல்வதால் விபத்து-உயிரிழப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு பிறப்பித்த தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்கு அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு ஒன்றிய அரசின் நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கு. இந்நிலையில் திடீரென்று தாமரை கட்சி கனிம வள விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம் அறிவித்துள்ளது. ஆனா, அந்த போராட்ட அறிவிப்பே பெரிய அக்கப்போரில்தான் நடந்துள்ளது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

தாமரை கட்சியின் மாவட்ட முக்கிய நிர்வாகியை கலந்து ஆலோசிக்காமல் பொன்னானவர் முதலில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டாராம். இது மாவட்ட முக்கிய நிர்வாகி தரப்புக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளதாம். இப்படி தன்னந்தனியாக போராட்டம் என்று அறிவித்தால் எப்படி என்று கட்சிக்குள்ளும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மறுநாள் பிரஸ் மீட் ஒன்றை நடத்தி அதில் ‘போராட்டம் நடத்தப்படும்’ என்ற சப்ஜெக்டை மட்டும் மாவட்ட முக்கிய நிர்வாகியை கொண்டே பேச வைத்து நிலைமையை சமாளித்தாராம் பொன்னானவர். இதுதான் தாமரை கட்சியில் ஹாட் டாபிக்காக இப்போது பேசப்பட்டு வருகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?