தாம்பரம் பகுதிகளில் தொடரும் மின்வெட்டு: இரவில் விடியவிடிய மக்கள் அவதி


தாம்பரம்: தாம்பரம் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், இரவில ்விடிய விடிய தூங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாம்பரம் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட மேற்கு தாம்பரம், கடப்பேரி, சானடோரியம், ரங்கநாதபுரம், மாந்தோப்பு, வெற்றி நகர், அம்பாள் நகர், முல்லை நகர், காந்தி நகர், அமல் நகர், கன்னடபாளையம், சிடிஓ காலனி, கிருஷ்ணா நகர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்தது ஒரு நாளுக்கு 7 முதல் 8 முறை மின்வெட்டு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, திடீர் திடீரென குறைந்த மற்றும் உயர்ந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. இதிலும், குறிப்பாக இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.

கடும் வெயில் காலத்தில் இதுபோன்ற மின்வெட்டுகள் ஏற்படுவதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் குழந்தைகளுடன் விடிய விடிய தூங்க முடியாமல் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து புகார் தெரிவிக்க தாம்பரம் மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால், பெரும்பாலான நேரம் மின்வாரிய ஊழியர்கள் அழைப்பை எடுப்பதில்லை. சில நேரங்களில் டெலிபோன் ரிஷீவரை எடுத்து கீழே வைத்து விடுவதால் பொதுமக்களால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், மின்வாரிய அலுவலக உதவி பொறியாளரை தொடர்பு கொண்டால், ஏதாவது ஒரு காரணம் கூறுவதோடு, உங்கள் அவசரத்துக்கு எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது எனவும், பழுதுகள் ஏற்பட்டிருந்தால் அவை எப்போது சரி செய்யப்படுகிறதோ அப்போதுதான் மின் சப்ளை வரும் என அலட்சியமாக கூறுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தாம்பரம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் பகுதிகளில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தொடர்ந்து பல முறைகள் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு அடைகிறது. நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் எந்த ஒரு பதிலும் இல்லை. மேலும், உயர் அதிகாரிக்கு தொடர்பு கொண்டால் அவர் அலட்சியமாக பேசி இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர், அதிகாலை 3 மணிக்கு தான் மீண்டும் மின் சப்ளை வந்தது.

இதனால், பல மணி நேரம் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர். இதேபோல நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட முறை மின்வெட்டு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இதுபோன்ற தொடர் மின்வெட்டு பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்டு அரசின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது