பல்வேறு குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 2.28 லட்சம் பேர் எழுதினர்: நாடு முழுவதும் 500 மையங்களில் நடந்தது

சென்னை: பல்வேறு குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு நேற்று நடந்தது. நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிடப்பட்டது.

இதில், ஏராளமான மருத்துவர்களுக்கு சுமார் பல 100 கி.மீட்டர் தூரம் கடந்து தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது. தமிழகத்திலும் ஏராளமான மருத்துவர்களுக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதுகுறித்து அரசியல் ரீதியாக கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன்பிறகு, தமிழகத்தில் 75 சதவீத மருத்துவர்களுக்கு, மாநிலத்துக்குள்ளாகவே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆனாலும், தமிழகத்தில் இருந்து முதுநிலை நீட் தேர்வில் பங்கேற்கும் மருத்துவர்கள் 25 சதவீதம் பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தர்மபுரியை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் 170 நகரங்களில் 500 தேர்வு மையங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட்நுழைவுத் தேர்வு நடந்தது. 2.28 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் சென்னை, நெல்லை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த முதுநிலை நீட் தேர்வில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினனர். இந்த தேர்வு காலை, மாலை என 2 ஷிப்ட்களாக நடந்தது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையில் முதல் ஷிப்ட் தேர்வும், மாலை 3.30 மணி முதல் 7.30 மணி வரையில் 2வது ஷிப்ட் தேர்வும் நடந்தது. தேர்வு மையங்களுக்கு வந்த மருத்துவர்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டார்கள்.

ஹால்டிக்கேட் மற்றும் மருத்துவ தேசிய மருத்துவ ஆணையத்தின் நகல்களை மட்டுமே தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. நகைகள், செல்போன், இயர் பட்ஸ் உள்பட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கணினி வழியிலான முதுநிலை நீட் தேர்வில் மருத்துவர்கள் 200 வினாக்கள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு சரியான வினாவுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வு, எளிமையாக இருந்ததாக தேர்வில் பங்கேற்ற டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related posts

சென்னையில் நேற்று அதிகபட்சமாக மணலியில் 14.49 சென்டி மீட்டர் மழை பதிவு!

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை