ஆம்பூரில் சீல் வைக்காத மின் மீட்டர் பாக்சில் போடப்பட்ட தபால் வாக்குகள்: தேர்தல் அதிகாரியிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்

தமிழ்நாடு முழுவதும் 39 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதையொட்டி தேர்தல் பணிகளுக்காக மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பலருக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடந்து வருகிறது. இந்த அலுவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்தது.

ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அலுவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு பணிகள் நேற்று காலை தொடங்கியது. இந்த பணிகளை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றார். பின்னர் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த மண்டல அலுவலர்கள் மற்றும் இதர வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களது தபால் வாக்கை செலுத்த தொடங்கினர்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தபால்வாக்கு பெட்டி வழக்கமான தபால் வாக்கு பெட்டி போல் இல்லாமல், மின் மீட்டர் பாக்ஸ் போல இருந்தது. மேலும் உரிய வகையில் சீல் வைக்கப்படவில்லை, வாக்குப்பெட்டி போன்று இது இல்லை, இதில் நாங்கள் வாக்கு செலுத்துவதா? எனக்கூறி அங்கு வாக்குச்சவாடி அலுவலர்கள், சிலர் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பெட்டியை மாற்ற, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜா உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு தபால்வாக்கு பெட்டிகள் கொண்டுவரப்பட்டு அதில் வாக்கு செலுத்தும் பணி சுமார் அரை மணி நேரம் தாமதத்திற்கு பின் நேற்று மதியம் துவங்கியது. இதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த அலுவலர்கள் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கான தங்களது வாக்குகளை தபால் வாக்குகளாக செலுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது

பாக்கு தோப்பில் முகாமிட்ட யானைகள் டிரோனில் கண்காணித்து விரட்டியடிப்பு