துணைவேந்தர் பதவி நீட்டிப்பு எதிர்த்து பெரியார் பல்கலை. முன்பு போராட்டம்

ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி, ஆசிரியர் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர், நேற்று மாலை வாயிற் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதவிக் காலம் நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், அவரை ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து துணைவேந்தர் ஜெகநாதன், நேற்று காலை 9.30 மணி முதல் தனது அன்றாட பணியை மேற்கொண்டார். துணைவேந்தரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, நேற்று வாயிற்முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல், ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பிரேம்குமார் தலைமை வகித்தனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, தமிழ்நாடு அரசு பொறுப்பு பதிவாளரை நீக்கி விட்டு, இந்திய ஆட்சிப்பணி அதிகாரியை நியமிக்க வேண்டும். துணைவேந்தரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்ய, சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்