முதுகலை வைணவ பாடங்களில் தேர்ச்சி 65 மாணவர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் சார்பில் நடத்தப்படும் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் முதுகலை வைணவம் மற்றும் முதுகலை ஸ்ரீபாஷ்யம் ஆகிய வைணவ பாடங்களில் தேர்ச்சி பெற்ற 65 மாணவர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வைணவ சமய முன்னோடியாக திகழ்ந்த புரட்சித் துறவி ராமானுஜரின் 1,000வது ஆண்டு நிறைவையொட்டி ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம் தொடங்கப்பட்டு, அங்கு முதுகலை பயின்ற 29 வயதுடைய ஒருவரும், 85 வயதுடைய ஒருவரும் சான்றிதழை பெற்றிருப்பது பக்திக்கும், படிப்பிற்கும் வயது வித்தியாசமே கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த பட்டப் படிப்பு தொடங்கப்பட்டு 34 மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே இதுவரையில் இல்லாத வகையில் பகவத் ஸ்ரீ ராமானுஜரின் 9 நூல்களில் ஒன்றான ஸ்ரீ பாஷ்யம் என்ற நூலையே பட்டப்படிப்பாக முதன்முதலில் கொண்டு வந்த பெருமை அறநிலையத்துறையே சேரும். கரூர் மாவட்டம், அய்யர்மலை, ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் கம்பிவட ஊர்தி அமைக்க 2010ம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞரால் வெளியிடப்பட்டு 10 ஆண்டு காலம் பணிகள் முடக்கப்பட்டிருந்தன. இந்த அரசு பொறுப்பேற்ற பின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பல்வேறு பரிசோதனைகளுக்குபின் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆடி மாதம் என்பதால் அதிக அளவிலான காற்று வீசுவதால் அதை கண்காணிப்பதற்கு பொருத்தப்பட்ட கருவியில் காற்றின் வேகம் 36 கிலோ மீட்டராக பதிவாகியுள்ளது. அதனால் ரோப் காரின் வீலானது கம்பிவடத்தில் இருந்து நழுவி செயல்படாமல் நின்று விட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட டெக்னீசியன்கள் ரோப் காரில் இருந்தவர்களை பாதுகாப்பாக இறக்கினார்கள். பின்னர் ரோப்கார் பணியில் சம்பந்தப்பட்ட வல்லுநர்களை கொண்டும், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நேரடியாக சென்று ஆய்வு செய்கின்றனர் என்றார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது