துறைமுகங்களில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தியதால் சாத்தியம் கடல்வழி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்

* சிறப்பு செய்தி
தமிழ்நாட்டு துறைமுகங்களில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தியதால் கடல்வழி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என்று தமிழகத்தில் உள்ள துறைமுக உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு தொழில்மயமான மாநிலம் மட்டுமல்லாது 48.40% நகரமயமாக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகையில் சுமார் 9.26% ஆகும். தற்போது, தமிழ்நாடு மக்கள் தொகை 5.96% சதவீதமாக உள்ளது. மேலும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைகள் துறை 54% பங்களிப்பு உள்ளது. மேலும், உற்பத்தி 33% மற்றும் விவசாயம் 13% ஆக உள்ளது.

இதில் ஒரு நாட்டின் வளர்ச்சியில் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மாநிலங்களை பொறுத்தவரையில், அங்கு உற்பத்தியாகும் பொருட்கள், ஏற்றுமதி அளவை பொறுத்தே மாநிலத்தின் பொருளாதாரம் குறிப்பிடப்படுகிறது. நாட்டில், தமிழ்நாடு முதல் 5 இடங்களில் தமிழ்நாடு இருந்து வந்தது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் இருந்தது. வங்ககடலை ஒட்டிய மாநிலங்கள், சாலை மார்க்கமாக ஏற்றுமதி செய்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே இருந்து வந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு அரசு ஏற்றுமதியிலும் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, மூன்றாவது ஆண்டாக தமிழகம் ஏற்றுமதி பட்டியலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் சுமன் பெர்ரி, 2022ம் ஆண்டுக்கான ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டு அட்டவணை அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் தமிழ்நாடு 80.89 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் 78.20, கர்நாடகம் 76.36, குஜராத் 73.22 ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட்டது. பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு ஏற்றுமதி அதிகரிப்பு குறித்து ஆராய்ந்து மாநிலங்களின் ஏற்றுமதி பங்களிப்பு குறித்த அறிக்கையை நிதி ஆயோக் தயாரித்துள்ளது. மாநிலங்களின் தனித்துவமான முயற்சி மற்றும் அந்தந்த மாநிலங்களின் புவியியல் சார்ந்த சாதக அம்சங்கள், மாநிலங்களிடையிலான போட்டி ஆகியன ஏற்றுமதி அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக நிதி ஆயோக் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

போட்டிக்கான கல்வி மையத்தின் ஒத்துழைப்போடு நிதி ஆயோக் ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டு அட்டவணையைத் தயாரித்துள்ளது. மாநிலங்களில் நிலவும் 4 முக்கியக் காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டன. அதாவது மாநில அரசின் கொள்கை, வர்த்தகத்திற்குரிய சூழல், ஏற்றுமதி அதிகரிப்புக்கான நடவடிக்கை மற்றும் ஏற்றுமதி செயல்பாடுகள் ஆகியன கணக்கிடப்பட்டன. புள்ளிவிவர தயாரிப்புக்கு 56 விதமான காரணிகள் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நான்கு முக்கியக் காரணிகள் தவிர்த்து 10 விதமான துணைக் காரணிகள் அளவீடுகளில் பயன்படுத்தப்பட்டன.

ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, நிறுவனங்களின் செயல்பாடு, வணிக சூழல், கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு வசதி, ஏற்றுமதிக்கான கட்டமைப்பு வசதிகள், வர்த்தக அதிகரிப்புக்கு மாநில அரசின் உதவி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டமைப்பு வசதி, ஏற்றுமதி பரவலாக்கல், வளர்ச்சிக்கான வழிமுறைகள் உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய மாநிலங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பெருமளவு கடலோரப் பகுதி உள்ளது சாதக அம்சமாகும். மேலும், சென்னைத் துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியன ஏற்றுமதி அதிகரிப்புக்கான முக்கியக் காரணிகளாகும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 9 சதவீதமாக உள்ளது. ஆட்டோமொபைல், ஜவுளி, இயந்திர பாகங்கள் உள்ளிட்டவை தமிழகத்திலிருந்து ஏற்றுமதியாகின்றன. கடல் உணவு, வேளாண் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியிலும் தமிழகத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. தமிழ்நாடு அரசு 2030ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசின் செயல்திட்டங்கள், அரசின் முன்னெடுப்புகளால் 2028ம் ஆண்டிலேயே இந்த இலக்கு எட்டப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மின்னணுப் பொருள் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்துள்ள தமிழ்நாடு தற்போது ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டிலும் முதலிடத்தைப் பிடித்து பீடு நடை போடுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது: ஆட்டோமோடிவ், தோல் பொருள்கள், ஜவுளி ஆகிய தொழில்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மின்னணு பொருள் ஏற்றுமதியில் சமீபத்தில் தமிழ்நாடு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், சென்னை, திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்தான ஏற்றுமதி அதிகம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளே இதற்கு முக்கியக் காரணமாகும். காஞ்சிபுரத்திலிருந்து பட்டு மற்றும் பட்டு சார்ந்த பொருள் ஏற்றுமதி அதிகம் உள்ளது. புவிசார் குறியீடு சார்ந்த பொருள்கள் காஞ்சிபுரத்திலிருந்து ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள், இன்ஜினியரிங் சார்ந்த பொருள்கள், மருந்து மற்றும் ரசாயன பொருள்கள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. ஜவுளித் தொழிலில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு முன்னிலையில் உள்ளது. இங்கிருந்து பருத்தி, கைத்தறி தயாரிப்புகள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. ஏற்றுமதி அதிகரிப்புக்கான முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ள 4 முக்கியக் காரணிகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதே முதலிடம் நோக்கிய நகர்வுக்கு முக்கியக் காரணமாகும். தொழில் நிறுவனங்கள் கட்டமைப்புக் குறியீட்டில் தமிழகம் 97.21 புள்ளிகளை எடுத்துள்ளது. ஏற்றுமதிக் குறியீட்டில் 73.68 புள்ளிகளும், ஏற்றுமதி செயல்பாட்டில் 63.34 புள்ளிகளும் எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை துறைமுகத்தின் உயர் அதிகாரி கூறுகையில்: தமிழ்நாட்டில் 4 துறைமுகங்கள் உள்ளது. அதில் நுழைவு வாயிலை அதிகரித்தோம், தவறு செய்தால் அபராதம் விதித்தோம் உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாட்டு காரணமாக நெ. 1 இடத்தை பிடித்து உள்ளது. முன்னர் ஒரு கன்டெய்னர் வந்து செல்ல 36 மணி நேரம் ஆகும். ஆனால் தற்போது 6 மணி நேரம் ஆகிறது.துறைமுகம் மேம்படுவதற்கு ஒன்றிய அரசு உடன் மாநில அரசு சேர்ந்து சிறப்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள்
தமிழகத்தில் அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளாக ரோம், அமெரிக்கா, மேற்கத்திய ஆசிய நாடுகளுக்கு தோல் மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

* 48.5 மில்லியன் டன் ஏற்றுமதி இறக்குமதி
சென்னை துறைமுகத்தில் கடந்த நிதியாண்டில் 55 மில்லியன் டன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 48.5 மில்லியன் டன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் செய்யப்பட்டன. இந்தாண்டு கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி ஏற்றுமதி, இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்