பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழா

அணைக்கட்டு : வேலூர் மாவட்டத்தில் சித்திரை மாதத்தில் நடக்கும் திருவிழாக்களில் வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழா பிரசித்தி பெற்றது. இதில், வல்லண்டராமம் கிராமத்தில் பொற்கொடியம்மன் ஊர் கோயிலும், வேலங்காடு ஏரியில் பொற்கொடியம்மன் ஏரி கோயிலும் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில்களில் வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய 4 கிராம மக்கள் சேர்ந்து, ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை புஷ்பரத ஏரி திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, சித்திரை மாத கடைசி புதன்கிழமையான இன்று(10ம் தேதி) வேலங்காடு ஏரியில் புஷ்பரத ஏரி திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை 2 கோயில்களிலும் பொற்கொடியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர், இரவு 7 மணி அளவில் இன்னிசை கச்சேரியும், நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் புஷ்பரதத்தில் ஏறுதல், வாணவேடிக்கை, கரகாட்டம், நையாண்டி மேளதாளங்களுடன் வல்லண்டராமம் கிராமத்தில் புஷ்பரத வீதிஉலா நடந்தது. இதில், வல்லண்டராமம் மட்டுமின்றி, வேலூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, இன்று காலை 6 மணி அளவில் அன்னாசிபாளையம் கிராமத்தில் அம்மன் புஷ்பரத வீதி உலா நடக்கிறது. பின்னர், அம்மனுடன் புஷ்பரதம் ஏரிக்கு கொண்டு வரப்பட்டு புஷ்பரத ஏரி திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. பின்னர், மாலை வேலங்காடு கிராமத்தில் அம்மன் வீதிஉலா சென்று, இரவு அங்கேயே தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்நிலையில், நேற்று காலையில் இருந்தே உள்ளூர், வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பச்சை ஓலை, வேப்பிலை கட்டிக்கொண்டு வேலங்காடு ஏரிக்கு வந்து அம்மனை தரிசித்தனர். நேற்று நள்ளிரவே வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருவிழாவை காண்பதற்காக வேலங்காடு ஏரியில் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், அசம்பாவிதங்களை தடுக்க கோயிலை சுற்றி கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டிஎஸ்பி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அண்ணாமலை, எழுத்தர் ஆறுமுகம், 4 கிராம மேட்டுக்குடிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related posts

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கடந்த 25 வருடங்களாக மூன்று வேளையும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மெக்கானிக்: ஒசூரில் பரபரப்பு