பூந்தமல்லி அருகே பரபரப்பு தனியார் பேருந்து மோதியதில் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பஸ்: மின்னல் வேகத்தில் இறங்கி ஓடியதால் பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை: பூந்தமல்லி அருகே, தனியார் எலக்ட்ரிக் பேருந்து மோதியதில் எலக்ட்ரிக் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் கீழே இறங்கி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்து 10க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெங்களூரு நோக்கி நேற்று காலை 6 மணி அளவில் சென்றது. பேருந்து, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து திடீரென எலக்ட்ரிக் ஆம்னி பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில் எலக்ட்ரிக் பஸ்சின் பேட்டரி பெட்டி நொறுங்கி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்டதும் உள்ளே இருந்த பயணிகள் அலறி அடித்தபடி, பேருந்திலிருந்து இறங்கி வெளியே ஓட்டம் பிடித்தனர். அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து, பெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை போலீசார் மற்றும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாலையில் எரிந்து எலும்புக்கூடாக கிடந்த எலக்ட்ரிக் ஆம்னி பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த ஆம்னி பேருந்து முழுவதும் பேட்டரியால் இயங்கக் கூடியது. பின்னால் வந்த பேருந்து மோதிய வேகத்தில் உடனடியாக தீப்பிடித்து எரிந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் பணம், பொருட்கள், கல்லூரி மாணவி ஒருவரின் சான்றிதழ்கள், விலை உயர்ந்த 3 செல்போன்கள் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் நாசமானது.

உயிர் பிழைத்தால் போதும் என அவசர அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கியதால் தங்கள் உடைமைகளை எடுப்பதற்கு கூட முடியாமல் போனதாக பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவித்தனர். காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அதிகளவில் வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. எலக்ட்ரிக் பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பக்கத்தில் எதிர் திசையில் வாகனங்கள் சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

* ‘ஓட்டுநர் மீது தவறு இல்லை’
எலக்ட்ரிக் பஸ் நிறுவனமான க்ரீன்செல் மொபிலிட்டி வெளியிட்ட அறிக்கையில், ‘‘எங்கள் பஸ்சின் பின்பகுதியில் மற்றொரு பஸ் மோதியதால், வாகனம் தீப்பிடித்து எரிந்தது, ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களால் பயணிகளை சரியான நேரத்தில் இறக்கிவிட முடிந்தது. பயணிகளுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. தீ விபத்துகள் ஏதுமின்றி 5 கோடி கிலோ மீட்டர்களுக்கு மேல் எங்கள் பேருந்துகள் பயணித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என கூறியுள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்