பூந்தமல்லியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகள்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்தார்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகளை கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் மின்சாரத் தேவையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிய மின்மாற்றிகள் அமைத்து சீரான மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும் என பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து பரிசீலித்த எம்எல்ஏ உடனடியாக புதிய மின்மாற்றிகள் அமைக்க அந்த துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு ருக்மணி நகர், சீரடி சாய் நகர், 12வது வார்டு மகாலட்சுமி நகர், கீர்த்தி கார்டன், 13வது வார்டு சீனிவாசா நகர் 14வது வார்டு. குயின் விக்டோரியா சாலை ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 புதிய உயர் திறன் கொண்ட மின்மாற்றிகள் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டன. இந்த புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி முன்னாள் நகர் மன்ற தலைவர் பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை தலைமையில் நேற்று நடந்தது. இதில் நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர் தர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகர்மன்ற உறுப்பினர்கள் கன்னி மரியாள் வின்பிரட், அசோக்குமார், கீதா மேகநாதன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர திமுக நிர்வாகிகள் எச்.தாஜூதீன், துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டில்லிராணி மலர்மன்னன், அசோக்குமார், புண்ணியகோட்டி, அன்பழகன், சௌந்தர்ராஜன், வட்டச் செயலாளர்கள் ராஜ்குமார், சரவணன், நந்தகுமார், வின்பிரட், வார்டு பிரதிநிதி எம். இளையராஜா உள்பட ஏராளமான திமுகவினர், மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்