பொன்னேரியில் சாலையை சீரமைக்கக்கோரி மறியல்


பொன்னேரி: பொன்னேரி அடுத்த காட்டாவூரில், கடந்த 4 வருடங்களாக சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மருத்துவமனைகளுக்கோ அல்லது அத்தியாவசிய தேவைகளுக்கோ சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில் இச்சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காட்டாவூர் ஊராட்சி மன்ற தலைவர் மங்கை உமாபதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் கடந்த 4 வருடங்களாக சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சில சமயங்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே, இதுகுறித்து பொன்னேரி எம்எல்ஏவிடம் புகாரளித்திருந்த நிலையில், அவரும் ஆய்வு செய்து விரைவில் சாலை சீரமைத்து தரப்படும் எனக் கூறினார். ஆனால், 5 மாதமாகியும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இனிமேலும் சாலை சீரமைக்க காலதாமதமானால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் கூறினர்.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்