அனுமதி பெற்றவர்கள் தவிர பொன்னம்பலமேட்டுக்கு யாரும் செல்லக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் மகரவிளக்கு பூஜை தினத்தன்று மகரஜோதி ஏற்றப்படும் பொன்னம்பலமேடு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு வனத்துறை, மின்வாரியத் துறை மற்றும் தேவசம் போர்டு ஆகியவற்றின் சிறப்பு அனுமதி பெற்ற ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பொன்னம்பலமேட்டில் சிலர் அத்துமீறி நுழைந்து பூஜை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வனத்துறையும், போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின. இதில் நாராயணசாமி என்பவரது தலைமையில் 6 பேர் பூஜை நடத்தியது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு வனத்துறையை சேர்ந்த 2 ஊழியர்கள் உதவியதும் தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறை ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். நேற்று ஈசன் என்பவரும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, சபரிமலை பொன்னம்பலமேட்டில் அலுவல் ரீதியாக அனுமதி பெற்றவர்கள் தவிர வேறு யாரும் செல்லக்கூடாது என்றும், இது தொடர்பாக வனத்துறையும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு

உத்தர பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது.

பள்ளிக் கல்வித் துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு