பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூருக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டதா? லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்ற வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதா என்று விளக்கம் அளிக்கும்படி பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மூன்று மாத இடைவெளிக்கு பிறகு இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 19 முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டதா என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக வேலூர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வசந்த் லீலா, தனது விளக்கத்தை சென்னை உயர்நீதிமன்ற பதிவு துறைக்கு அனுப்பி உள்ள நிலையில் இந்த வழக்கு இறுதி விசாரணையின் போது நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ அவர் வாதங்களை முன்வைக்கலாம். வழக்கறிஞர் வைப்பதாக இருந்தால் அது குறித்து தலைமை பதிவாளருக்கு கோரிக்கை அனுப்ப வேண்டும். பிப்ரவரி 23ம் தேதி அவர் தனது வாதங்களை முன் வைக்கலாம் என்று அனுமதி அளித்தார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா