பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குமரியில் கரும்பு கட்டுகள் விற்பனைக்கு வந்தன

நாகர்கோவில்: குமரியில் பொங்கலை முன்னிட்டு கரும்பு கட்டுகள் விற்பனைக்கு குவிந்தன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக காய்கனிகள் விலை குறைவாக இருக்கும். ஆனால், தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக காய்கறிகள் விலை குறையாவிட்டாலும், கடந்த சில நாளாக விலை சீராக உள்ளது. பொதுவாக பொங்கல் பண்டிகையன்று அனைத்து வகை கிழங்குகளும், பொங்கல் வைத்து பூஜை செய்யும் போது, விளக்கு முன்பு படைப்பார்கள் என்பதால், அனைத்து வகை கிழங்குகளும் விற்பனைக்கு வரும்.

தற்போது, கிழங்கு வகைகள் வரத்து குறைவு காரணமாக அவற்றின் விலை சராசரியாக ரூ.80 என்ற நிலையில் உள்ளது. வடசேரி கனகமூலம் சந்தையில், சிறுகிழங்கு கிலோ ரூ.100க்கும், சேனை கிழங்கு ரூ.60க்கும் இன்று விற்பனை ஆனது. இதுபோல், பனங்கிழங்கு 25 எண்ணம் கொண்ட கட்டு இந்தாண்டு முதல் கிலோ கணக்கிற்கே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சேப்பங்கிழங்கு, காச்சி கிழங்கு, குச்சி கிழங்கு, சீனிக்கிழங்கு, பிடி கிழங்கு, சேம்பு, கருணை கிழங்கு போன்றவையும், ரூ.760 முதல் தரத்தை பொருத்து ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை அப்டா சந்தைக்கு கரும்பு கட்டுகள் பொங்கல் விற்பனைக்காக வந்துள்ளன. 15 எண்ணம் கொண்ட கரும்பு கட்டு, சில்லறை விற்பனைக்கு ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தனியாக வாங்கினால், ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. காய்கனிகளை வடசேரி கனகமூலம் சந்தையில் இன்றைய சில்லறை விற்பனை விபரம், தக்காளி கிலோ ரூ.35, கத்தரிக்காய் ரூ.45 – ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.35, பச்சை மிளகாய் ரூ.80, முட்டை கோஸ் ரூ.30, முருங்கைக் காய் ரூ.150, மாங்காய் ரூ.80, கேரட் ரூ.65 – ரூ.75, பீட்ரூட் 50, இஞ்சி ரு.130, வழுதலை 80, பல்லாரி ரூ.35, சின்ன வெங்காயம் ரூ.50, வெள்ளை பூண்டு ரூ.300 – ரூ.320, வெள்ளரிக்காய் ரூ.25, பூசணி 25, தடியங்காய் ரூ.30, காலிபிளவர் ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் குலை இதுவரை விற்பனைக்கு வராவிட்டாலும், நாளை விற்பனைக்கு வரும். குலையின் தரத்தை பொறுத்து ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படும் என கனகமூலம் சந்தை வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேஷ் கூறினார்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.