பொங்கல் பண்டிகைக்காக 19,484 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: சென்னையில் இருந்து 3000 பஸ்கள் புறப்படும்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து இன்று 3000 பேருந்துகள் புறப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, கோவை உட்பட பல்வேறு நகரங்களில் பணியாற்றுவோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கிடையில் நாளை சனிக்கிழமை முதல் விடுமுறை வருவதால் இன்றைக்கே சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல தொடங்குவர்.

இதன் காரணமாக் இன்று முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மொத்தம் 19,484 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இன்று சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 3000 பேருந்துகளும், பிற முக்கிய நகரகங்களில் இருந்து 1,986 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கிளாம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த இடங்களுக்கு செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 450 இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதன்படி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுகின்றன. திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இடங்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை போக்குவரத்து கழகங்களை சேர்ந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை(45) வழியாக திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மேலும், திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், கோயம்பேடுக்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்து உரிய நேரத்தில் பயணம் செய்யலாம். பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 6,459 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.

* கோயம்பேட்டில் கட்டுப்பாட்டு அறை
பேருந்துகள் இயக்கம் குறித்த தகவலை பெறவும், புகார் அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 9445014450, 9445014436 ஆகிய அலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 1800 425 6151 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!