பொங்கல் பண்டிகை நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தேவையா? : ஐகோர்ட் கேள்வி

சென்னை: பொங்கல் பண்டிகை நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தேவையா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, 9ம் தேதி (நேற்று) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக டிசம்பர் 19ம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் வழங்கின.

இந்நிலையில், இந்த வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த பி ஃபார்ம் மாணவர் பால் கிதியோன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரக்கூடிய நிலையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும்,”என வாதிடப்பட்டது.

தொழிற்சங்கங்கள் தரப்பில், “கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனை நிலுவையில் உள்ளது. ஓய்வூதியதர்களுக்கான அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இதுவரை உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. அதனால் தான் பிரச்சனையானது தொடர்ந்து நீடித்து வருகிறது,”என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், பேச்சுவார்த்தை பல கட்டங்களில் நடந்து முற்று பெறாத நிலையில் ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு வாதங்கனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும் கூட கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். போராட்டம் நடத்துவதற்கு தொழிற்சங்கத்தினருக்கு உரிமை இல்லை என்று நாங்கள் கூறவில்லை. பண்டிகை நேரத்தில் போராட்டத்தை நடத்துவது முறையற்றது. அரசும் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது ?.ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்து வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்