பொங்கலுக்கு பின் அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது. மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2800 கோடி ஒதுக்கி, டீசல் மானியமாக ரூ.2000 கோடியும், மாணவர் இலவச பஸ் பயணத்திற்காக ரூ.1500 கோடியும் ஒதுக்கீடு செய்தவர் முதல்வர். அரசாணை 36-ஐ பிறப்பித்து போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் மூலம் போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட காரணமானவர் முதல்வர். புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்து, இத்துறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளார். தீபாவளி போனஸ் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் குறைத்து வழங்கப்பட்டதை, யாரும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 சதவிகிதமாக உயர்த்தி ரூ.16,800/- வழங்கினார். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவைகளை இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது.

இப்போது சென்னையில் வரலாறு காணாத அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அதனால் பொதுமக்கள் சந்தித்துள்ள இழப்புகளை சீர் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த இயற்கை பேரிடருக்கு, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை கூட வழங்க முன்வராத நிலையில், முதல்வர் நிவாரண தொகுப்பை அறிவித்து வழங்கி வருகிறார். பேரிடர் நேரத்தில் உடனடியாக களம் இறங்கி பேருந்துகளை வழக்கம் போல் இயக்கி, மக்கள் இயல்பு நிலைக்கு வர முன் நின்றவர்கள் போக்குவரத்து துறை தொழிலாளர்கள்.

அதேபோல தொழிற்சங்கங்களும் முதல்வருக்கும், பொதுமக்களுக்கும் இந்த பேரிடர் நேரத்தில் உறுதுணையாக நிற்க அன்போடு வேண்டுகிறேன். எனவே, பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், தமிழர் திருநாளாம் பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்னைகளும் தீர்த்திட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும்.

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற நடிகர் விஜய் கட்சி பிரமுகர் மர்ம சாவு

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது