பொங்கல் பண்டிகைக்காக பாரம்பரியத்தை தக்க வைக்கும் அகப்பை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

தஞ்சாவூர் : பொங்கல் பண்டிக்கைக்காக பாரம்பரியத்தை தக்க வைக்கும் அகப்பை தயாரிக்கும் பணியில் தச்சுத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது தான் தமிழர்களின் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும். அதில் ஒன்றுதான் இந்த அகப்பை இதனை பயன்படுத்தும் விதம்.பொங்கல் திருவிழாவின் போது புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு அரைத்து பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், இறைவனுக்கும், படைக்கப்படும். அப்போது மண்பானையில் உள்ள அரிசியை கிளற முக்கியமான ஒன்றான அகப்பையை தான் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த அகப்பை தேங்காய் கொட்டாங்குச்சியினை சுத்தம் செய்து, அதில் மூங்கிலை சீவி இரண்டடி நீளத்தில் கைப்பிடியாக்கி பயன்படுத்தி வந்தனர். அகப்பையை பயன்படுத்தும் போது, அதன் மணமும் பொங்கல் சுவையும் அதிகமாகும். காலப்போக்கில் நாகரீகத்தின் வெளிப்பாடாக சில்வர், பித்தளை கரண்டிகளின் வரவால் அகப்பை காணாமல் போய்விட்டது.

ஆனால் தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு என்ற கிராமத்தில் மட்டும் பொங்கல் தினத்தன்று அகப்பையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர் அந்த கிராம மக்கள்.இதற்காக அவ்வூரில் உள்ள தச்சுத்தொழிலாளர்கள் அகப்பையை தயாரித்து பொங்கலன்று காலையில் ஊர்மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்கி விடுவார்கள். இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் பெறுவதில்லை. அதற்கு மாறாக ஒருபடி நெல்லும், தேங்காய், வெற்றிலை – பாக்கு, பழம் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

இதுகுறித்து அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளி கணபதி கூறியதாவது எங்களது மூதாதையர் காலந்தொட்டு நாங்கள் தச்சுத் தொழிலில் தான் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஊரில் பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அகப்பை தயாரிப்பில் பணியில் ஈடுபட்டு வருகிறோம் பொங்கல் பண்டிகை வந்து விட்டால் பாரம்பரியமான அகப்பை தயாரிக்கும் பணியில் இறங்கி விடுவோம்.

இதற்காக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்பட்ட தேங்காய் கொட்டாங்குச்சியை சேகரித்து வைத்து பின்னர் அதனை பொங்கல் நெருங்கும் நாட்களில், நான்கைந்து தினங்கள் தண்ணீரில் ஊற வைத்து அதனை உளியால் பக்குவமாக செதுக்குவோம். மூங்கில் மரத்தினை வெட்டி அதில் இரண்டடி துண்டுகளாக நறுக்கி கைப்பிடி தயாரித்து பின்னர் அதில் கொட்டாங்குச்சியை இணைத்து விட்டால் அகப்பை தயாராகிவிடும். இந்த அகப்பையை நாங்கள் யாரும் விலைக்கு விற்பனை செய்வதில்லை. எங்களது கிராம மக்களுக்கு பொங்கலன்று பயன்படுத்த இதை தான் வழங்குகிறோம். நாங்கள் காலையிலேயே வீடு வீடாக சென்று கொடுத்துவிடுவோம்.

பின்னர் பொங்கலன்றே மதியம் எந்தந்த வீடுகளுக்கு அகப்பை கொடுத்தோமோ அங்கு சென்றால் அவர்கள் தேங்காய், பழம், வெற்றிலை – பாக்கு, ஒரு படி நெல் கொடுத்து எங்களை கவுரவிப்பார்கள். இந்த பாரம்பரியம் இன்றளவும் தொடர்வதால் நாங்கள் இந்த தொழிலை மகிழ்வோடு செய்து வருகிறோம் என்றார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்