பொங்கல் தொகுப்பு டோக்கன்களை பறித்ததால் போலீசில் புகார்; வாலிபரை ஓடஓட வெட்டிய அதிமுக ஊராட்சி தலைவர்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடுகனூர் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இங்கு சேல்ஸ்மேனாக பணியாற்றும் சின்னதுரை நேற்று முன்தினம் அதே கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்களை பொதுமக்களுக்கு வழங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார் டோக்கன்களை நானே கொடுத்து விடுகிறேன் எனக்கூறி, சேல்ஸ்மேனிடம் இருந்த பட்டியலையும், 10க்கும் மேற்பட்ட டோக்கன்களையும் பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் சேல்ஸ்மேன் சின்னதுரை ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் செய்யாறு வட்ட வழங்கல் அலுவலர் சங்கீதா, கூட்டுறவுத்துறை தனி அலுவலர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் பறித்து சென்ற 10 டோக்கன்களையும் வட்ட வழங்கல் அலுவலர் சங்கீதா பறிமுதல் செய்தார். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசில் நேற்று முன்தினம் மாலை புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறி அப்பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சரவணன்(21) என்பவரிடம், சந்தோஷ்குமார் நேற்று காலை தெருவில் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த மரம் வெட்டும் கத்தியால் சரவணனை ஓட ஓட கை, கால், வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரிமாக வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதை பார்த்த சந்தோஷ்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.

இதில் படுகாயம் அடைந்த சரவணனை, மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரணமல்லூர் போலீசார் தலைமறைவாக உள்ள சந்தோஷ்குமாரை தேடி வருகின்றனர். இதற்கிடையே சரவணனை வெட்டிய ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரி கடுகனூர் கிராம மக்கள் கடுகனூர் கூட்ரோட்டில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு