சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கேரள பலாப்பழம் வரத்து துவங்கியது: கூடுதல் விலைக்கு விற்பனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு கேரள பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. இந்த ஆண்டில் எதிர்பார்த்த வரத்து இல்லாததால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம், தர்பூசணி, பலாப்பழம், அன்னாசி பழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை சீசனை பொறுத்து விற்பனைக்காக மொத்தமாக கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் துவக்கத்தில் இருந்து தர்பூசணி வரத்து அதிகமாக காணப்பட்டது. இப்போதும், வெளி மாவட்டங்களில் இருந்து லாரி மற்றும் டெம்போக்களில் கொண்டு வரப்படும் தர்பூசணிகளை வியாபாரிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். இதுபோல், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை விசுவையொட்டி கேரளாவில் இருந்து மார்ச் மாதம் இறுதி முதலே பலாப்பழம் வரத்து இருக்கும்.

ஆனால், இந்த ஆண்டில் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நாட்கள் கடந்தே கேரள பகுதியிலிருந்து பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம், கொழிச்சாம்பாறை, சாலக்குடி, பெருமன்னா, பாட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மார்க்கெட்டுக்கு பலாப்பழம் வரத்து இருந்ததையடுத்து, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் விற்பனைக்காக நேரில் வந்து வாங்கி செல்ல துவங்கியுள்ளனர்.ஆனால், தமிழகத்தில் கடந்த ஆண்டில் எதிர்பார்த்த அளவில் மழை இல்லாததால் கடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பலாப்பழம் வரத்து என்பது குறைந்தது. மேலும், கேரள மாநில பகுதியிலிருந்தும் இந்த ஆண்டில் வரத்து குறைவால், தற்போது மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்படும் கேரள பலாவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் தரத்திற்கு ஏற்றார் போல் ஒரு பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.305 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பழம் ரூ.100 முதல் ரூ.500 ஆக எடைக்கேற்ப அதிகரித்துள்ளது. சித்திரை விசுவுக்கு இன்னும் சில நாட்கள் மட்டும் இருப்பதால், வரும் நாட்களில் இன்னும் கேரள பகுதியிலிருந்து பலாப்பழம் வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது என மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!