பொள்ளாச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட காவலர் கைது; 8 சவரன் நகை பறிமுதல்..!!

கோவை: பொள்ளாச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்துள்ள மாய்க்கனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சபரிகிரி. 41 வயதாகும் இவர், கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது தனிப்பிரிவு காவலராக எஸ்.இ.சி.ஐ.டியாக பணி மாறுதல் பெற்று விடுப்பில் இருந்துள்ளார். இதனிடையே, கடந்த ஜனவரி 27ம் தேதி பொள்ளாச்சி அருகே உள்ள மாய்க்கனாம்பட்டி மற்றும் சாலமநல்லூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் மற்றும் நடந்து சென்ற பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காவலர் சபரி செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவலர் சபரிகிரியை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் காவலரிடம் இருந்து 8 சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடம் அதிர்ச்சியையும், மற்ற காவலர்களிடம் முக சுழிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது